5 இடங்களில் தி.க.வினர் மறியல் போராட்டம் – 186 பேர் கைது

castesArccakarakka-request5-places-in-the

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க பணி அமர்த்த கோரியும், சாதி- தீண்டாமை ஒழிப்பை வலியுறுத்தியும் கடலூர் பெரியார் சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக தி.க.வினர் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நேற்று காலை கடலூர் பெரியார் சிலை அருகில் இருந்து ஊர்வலமாக செல்வதற்காக தி.க.வினர் கூடி நின்றனர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஊர்வலமாக செல்லக்கூடாது என்று தி.க. நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். அதையும் மீறி தி.க.வினர் கடலூர் பாரதிசாலையில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 54 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல் பண்ருட்டியில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க வலியுறுத்தி மண்டல செயலாளர் தண்டபாணி தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் தாமோதரன், முன்னாள் மாவட்ட செயலாளர் கோ.புத்தன், பகுத்தறிவாளர் கழக தலைவர் தமிழன்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மறியலில் ஈடுபட்ட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதே போல், விருத்தாசலம் பாலக்கரையில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். பின்னர், அவர்கள் தாலுகா அலுவலகம் நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் மாவட்ட செயலாளர் கதிரவன், அமைப்பாளர் இளவரசன், மாநில இளைஞரணி இளந்திரையன், வேல்முருகன், சுப்பிரமணியன், சேகர், பாலமுருகன், நடராஜன், ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, திராவிடர் கழகத்தினர் விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மறியலில் ஈடுபட்ட 6 பெண்கள் உள்ளிட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

புவனகிரியில் கடலூர் மண்டல தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் மாவட்ட அமைப்பாளர் தென்னவன், மகளிர் அமைப்பாளர் இளமதி, தலைமைக் கழக பேச்சாளர் யாழ்திலீபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மறியலில் ஈடுபட்டதாக 13 பேரை கைது செய்தனர்.

சிதம்பரத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

கார்ட்டூன் கேலரி