ஆக்கிரமிக்கப்பட்ட இசை கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரத்தின் நிலம்: ஐவர் கைது

சென்னை விருகம்பாக்கத்தில் பிரபல கர்நாடக இசை கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பிரபல கர்நாடக இசை கலைஞர் சீர்காழி சிவ சிதம்பரம். இவருக்கு விருகம்பாக்கம் இளங்கோ நகர் மெயின் ரோட்டில் சொந்தமாக இடம் உள்ளது. இதில் சிறிய ஓடு போட்ட வீடு உண்டு. இந்த வீட்டில் கடந்த ஒரு வருடமாக சினிமா உதவி இயக்குநர் முத்து பெருமாள் மற்றும் கோயம்பேடு மார்கெட்டில் வேலை பார்த்து வரும் சிவா ஆகிய இருவரும் தங்கி இருந்தனர். சீர்காழி சிவ சிதம்பரம் தனது இடத்தை காலி செய்து தரும்படி பலமுறை கூறியும் காலி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

நேற்று இடத்தை ஆக்கிரமிப்பு செய்யும் நோக்கத்துடன் முத்துபெருமாள், சிவா ஆகியோர் அங்கு ஆட்களை திரட்டி வைத்து மது அருந்தி கொண்டிருந்தனர். இதுகுறித்து காவலாளி ராஜா, சீர்காழி சிவசிதம்பரத்திற்கு தகவல் தெரிவித்தார். விருகம்பாக்கம் போலீசில் சீர்காழி சிவசிதம்பரம் புகார் அளித்தார். வடபழனி உதவி ஆணையாளர் ஆரோக்ய பிரகாசம், ஆய்வாளர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட முத்துபெருமாள், சிவா அவரது நண்பர்களான ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த உதவி இயக்குநர் ராஜா என்கிற ராஜ்குமார், நந்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வீரய்யா, எம்.ஜி.ஆர். நகர் சூளைபள்ளம் பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் சவுந்தர் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலம் தொடர்பாக முருகானந்தம் மற்றும் சீர்காழி சிவசிதம்பரம் இடையே கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து இந்த இடம் தொடர்பாக கோர்ட்டில் வழக்கும் நடைபெற்று வருகிறது.

கார்ட்டூன் கேலரி