மைசூரு

மைசூரு நகரில் ரெம்டெசிவிர் என்னும் பெயரில் சலைன் வாட்டரை கருப்புச் சந்தையை விற்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உலக அளவில் தற்போது கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது.  கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை எனக் கூறப்படும் இந்த பாதிப்பில் இதுவரை 14.35 கோடிக்கு மேல் பாதிக்கப்பட்டு 30.57 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர்.   மொத்தம்  12.21 கோடி பேர் குணம் அடைந்து தற்போது 1.83 கோடி பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனா பாதிப்பு அடைந்தோருக்குச் சிகிச்சைக்கு ரெம்டெசிசிர் மருந்து அங்கீகரிக்கப்பட்டுள்ளது.   தற்போது இந்தியாவில் 21.50 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.  எனவே ரெம்டெசிவிர் மருந்துக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  தவிர இந்த மருந்து வேறு பல கொடிய தொற்றுக்களுக்கும் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.

இந்த ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாட்டைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு சில இடங்களில் இதைக் கருப்புச் சந்தையில் விற்பதாகத் தகவல்கள் வந்தன  அதன் அடிப்படையில் மைசூரு காவல்துறையினர் பல இடங்களில் சோதனை நடத்தி உள்ளனர்.  தனியார் மருத்துவமனைகளில் இந்த மருந்தை ஒரு ஆண் செவிலியர் கருப்புச் சந்தையில் விற்றதும் தெரிய வந்துள்ளது.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கிரிஷ் என்பவர் தனது கூட்டாளிகளுடன் இணைந்து இந்த மருந்தை விற்பனை செய்வதைக் கண்டறிந்துள்ளனர்.   இந்த மருந்தைக் கைப்பற்றிச் சோதித்ததில் இந்த மருந்து பாட்டில்களில் உள்ளது ரெம்டெசிவிர் அல்ல என்பது தெரிய வந்துள்ளது.   இதில் சலைன் வாட்டர் எனப்படும் குளுகோஸ் நீரில் சாதாரண காய்ச்சலுக்குத் தரப்படும் பாரசிடிமால் மருந்து கலக்கப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கனவே உபயோகிக்கப்பட்ட காலி ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்களை வாங்கி கிரிஷ் பயன்படுத்தியதும் தெஇய வந்துள்ளது.   இதையொட்டி காலி பாட்டில்கள் விற்ற இருவர் மற்றும் இரு மருந்து பிரதிநிதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்கள் இதுவரை இந்த போலி மருந்தை மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் 900 முதல் 1000 பாட்டில்கள் விற்பனை செய்துள்ளனர்.

இந்த மருந்தின் விலை ரூ.1000 முதல் ரூ.5000 வரையில் ஆகும்.   ஆனால் போலி மருந்துகள் ரூ.40000க்கு விற்கப்பட்டுள்ளது.    இவர்களிடம் போலி மருந்தை வாங்கியவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.   மேலும் இந்த போலி மருந்து செலுத்தப்பட்ட நோயாளிகளையும் தேடும் பணிநடந்து வருகிறது.