சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை 6 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டம்

சென்னை:

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சி.எம். ஆர்.எல்) தன்னுடைய இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தை ஆறு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் சென்னை வடக்கு முனையிலிருந்து தெற்கு முனை வரை 118.9 கி.மீ தூரத்தில் மூன்று தாழ்வாரங்கள் உடன் மாதவரத்திலிருந்து சிப்காட் வரையிலும், மாதவரம் முதல் ஷோலிங்கநல்லூர் வரையிலும், லைட் ஹவுஸ் முதல் பூந்தமல்லி வரையிலும் உள்ளது.

இதைப்பற்றி சிஎம் ஆர் எல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாவது: எந்த ஒரு மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் ஒரு விரிவான வடிவமைப்பு தேவை, இது ஒரு ஒப்பந்தகாரருக்கு வழிகாட்டியாக செயல்படுகிறது, சுரங்கப்பாதை எவ்வாறு அமைக்க வேண்டும் என்பது குறித்து விரிவான திட்டம் தேவைப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போது இந்த விரிவான வடிவமைப்பு கிட்டத்தட்ட 90% முடிக்கப்பட்டுள்ளது, அதுமட்டுமில்லாமல் இந்த விரிவான வடிவமைப்பும், நிலம் கையகப்படுத்துவதும் தாமதத்திற்கான முக்கிய காரணங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்டுமானத்திற்கு முன்னர் விரிவான வடிவமைப்பை பெற முடிவுசெய்து சில நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்களை வழங்கியிருந்தோம், அவர்கள் தற்போது பெரும்பாலான பணிகளை முடித்து விட்டார்கள் மீதமுள்ள வடிவமைப்பு விரைவில் தயாராகும், அதனை நாங்கள் உடனடியாக ஒப்பந்தக்காரர்களிடம் ஒப்படைப்போம், இதனால் அவர்கள் கட்டுமானத்தை உடனடியாக துவங்க முடியும். இதற்கு திடமான திட்டமிடுதல் மற்றும் செயல்படுத்துதல் தேவைப்படுகிறது. மேலும் பல சவாலான விஷயங்களை எதிர்கொள்ள நேரிடும்… கட்டுமானம் அடுத்த ஆண்டு துவங்கி ஆறு ஆண்டுகளில் முடிவடையும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.