சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அம்மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆளுநர் பண்டாரு தத்தாத்ராயா உரையுடன் இன்று தொடங்கியது. ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதனால், தமது உரையை முடித்துக் கொண்டு ஆளுநர் பண்டாரு அவையில் இருந்து வெளியேறினார்.

அப்போது காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரை வழிமறித்ததாக அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ் புகார் தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரி, ஹர்ஷ் வர்தன் செளகான், சுந்தர் சிங் தாக்கூர், சத்பால் ரைசாதா மற்றும் வினய் குமார் உள்ளிட்ட 5 காங்கிரஸ் எம்எல்ஏக்களை இடைநீக்கம் செய்வதாக சபைத்தலைவர் விபின் பர்மர் அறிவித்தார்.

சஸ்பென்ட் செய்யப்பட்ட அனைவரும் கூட்டத்தொடர் முழுவதும் சபை நடவடிக்கைகளில் பங்குகொள்ள முடியாது. இமாச்சலப்பிரதேச பட்ஜெட் அமர்வு மார்ச் 20ம் தேதி நிறைவடைகிறது.