5கோடி பேரின் பேஸ்புக் தகவல்கள் திருட்டு!: அதிர்ச்சி தகவல்கள்

வாஷிங்டன்:

நாடு முழுவதும் 5 கோடி பேரின் முகநூல் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக  பேஸ்புக் நிறுவனம் அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து உள்ளது. மேலும், 4 கோடி பேரின் முகநூல் பக்கம் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.

பிரபல சமூக வலைதளமான பேஸ்புக் நிறுவனம் அடிக்கடி ஹேக் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் தேர்தலின்போது, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளில் செயல்படும் தேர்தல் தகவல்கள், தகவல்கள் பகுப்பாய்வு நிறுவனமான ‘கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா’ பேஸ்புக்கில் உள்ள 5 கோடிப் பேரின் தகவல்களை திருடியது தெரியவந்தது, அமெரிக்க தேர்தலில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவும் பேஸ்புக் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில், தற்போது மேலும் 5 கோடி பேர் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனத்தின் தயாரிப்பு மேலாண்மைத் துறை துணை தலைவர் கய் ரோசன் என்பவர் பேஸ்புக் நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது,

பேஸ்புக் உபயோகப்படுத்தி வருபவர்கள் பெரும்பாலோர்  தங்களது அக்கவுண்டை பாதுகாப்பற்ற முறையில் வைத்துள்ளனர். இந்த   பாதுகாப்பு குறைபாடு இருந்ததை கண்டுபிடித்திருப்பதாக பேஸ்புக் நிறுவனம் கண்டுபிடித்துள்ளது.

இந்த பாதுகாப்பு குறைபாட்டினால் சுமார் 5 கோடி பேரின் அக்கவுண்ட்கள் ஹேக் செய்யப்பட்டுள்ள தாகவும், மேலும் 4 கோடி பேரின் அக்கவுண்ட்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது இந்த பிரச்சனையை சரி செய்யும் பணிகளில் பேஸ்புக் நிபுணர்கள் குழு தீவிரமாக ஈடுப்பட்டுள்ளது. பேஸ்புக்கில் உள்ள சிறப்பு அம்சமான வியூ ஆஸ் (View As) எனும் வசதி இந்த பாதுகாப்பு குறைபாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைந்துவிட்டது.

தங்களுடைய அக்கவுண்ட்களை மற்றவர்கள் பார்க்கும் போது, அதில் உள்ள பதிவுகள் அனைத்தும் எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதை நமக்கு நாமே பார்ப்பதற்காக கொண்டுவரப்பட்ட வசதி தான் இந்த வியூ ஆஸ் எனும் சிறப்பு வசதி.

ஆனால் இந்த வசதி பேஸ்புக் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் பற்றிய ரகசிய தகவல்களை உள்ளடக்கிய பாதுகாப்பு டோக்கனை (security token) அம்பலப்படுத்துகிறது.  அதை பயன்படுத்தி ஒருவரின் பேஸ்புக் கணக்கைக் கட்டுப்படுத்த போதுமான தொழில்நுட்ப அறிவைக் கொண்ட எவராலும் பிறரின் அக்கவுண்ட்டை ஹேக் செய்ய முடியும்.

எனவே, இப்போது பேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் வசதி தற்காலிகமாக செயல்படாத நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள குறைபாடுகளை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என  கய் ரோசன் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் நிறுவன அதிகாரியின் இந்த அறிவிப்பு அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது.