பெங்களூரு,

மிழக அரசின் ஆட்சேபனையின்மையை தொடர்ந்து சசிகலாவுக்கு பெங்களுரு சிறைத்துறை 5 நாட்கள் பரோல் வழங்கி உள்ளது.

பல்வேறு நிபந்தனைகளுடன் சசிகலாவுக்கு 5 நாட்கள் பரோல் கிடைத்துள்ளது. அவரை வரவேற்க டிடிவி தினகரன் சிறைச்சாலை வளாகத்தில் காத்திருக்கிறார்.

நடராஜன் சென்னை குளோபல் மருத்துவமனையில் கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பார்க்க 15 பரோல் கேட்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து வரும் சசிகலா கர்நாடக சிறைத்துறையிடம் மனு செய்திருந்தார்.

இந்த மனு குறித்து, கர்நாடக சிறைத்துறை, தமிழக காவல்துறைக்கு கடிதம் அனுப்பி இருந்தது.

கர்நாடக சிறைத்துறையின் கேள்விக்கு தமிழக காவல்துறை மின்னஞ்சல் மூலம் பதில் தகவல் அனுப்பி தங்களது தரப்பில் ஆட்சேபனை இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து கர்நாடக சிறையில் சிறை அதிகாரிகளின் கூட்டம் இன்று மதியம்  12.30 மணிக்கு நடைபெற்றது. அப்போது அவருக்கு 5  நாட்கள் பரோல் கொடுக்க முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பரோலின்போது அவர் அரசியல் கட்சி தலைவர்கள் யாருடனாவது சந்தித்தால், அவரது பரோல் கேன்சல் செய்யப்படும் என்றும், மேலும் 3 ஆண்டுகளுக்கு பரோல் தரப்படாது போன்ற நிபந்தனையுடன் அவருக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 3 மணிக்கு மேல் சசிகலா பரோலில் வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.