அரசு ஊழியர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் வேலை: அமைச்சர் முதல்வருக்கு கடிதம்

பெங்களூரு:

மாநில அரசு ஊழியர்களின் பணி வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே போதுமானது என்று கர்நாடக மாநில அமைச்சர்,  பிரியங்க் கார்கே முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார். இது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அமைச்சரின் கடிதம் அரசு ஊழியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

கர்நாடகாவில் ஜேடிஎஸ் கட்சி தலைவர் குமாரசாமி தலைமையில், ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.  மாநிலத்தின் மூக நலத்துறை அமைச்சராக இருந்து வருபவர் பிரியங்க் கார்கே. இவர்தான் அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக முதல்வர் குமாரசாமிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அமைச்சர் பிரியங்க் கார்கே எழுதி உள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது,

மாநிலத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 6 நாட்கள் பணியாற்றி வருகிறார்கள். இதன் காரண மாக அரசு ஊழியர்களின் வேலை பளு அதிகமாக உள்ளது. அரசு அலுவலகங்களில் ஏராளமான கோப்புகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டியது அவசியமாகும்.

இதற்கு முன்பு ராமகிருஷ்ண ஹெக்டே முதல்-மந்திரியாக இருந்தபோது மாநிலத்தில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றினால் போதும் என்ற முடிவின்படி,  அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றினால் போதும் என்பதை அமல்படுத்தி செயல்படுத்தினார்.

அப்போது அரசு ஊழியர்கள் சிறப்பாகவும், ஊக்கமாகவும் பணியாற்றினார்கள். கோப்புகள் தேங்காமல் பார்த்து கொண்டனர். நாளடைவில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 5 நாட்கள் பணியாற்றும் நடைமுறைகள் மாற்றப்பட்டு, 6 நாட்கள் பணியாற்றியே தீர வேண்டும் என்பது நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போதும் அது தொடருகிறது.

இந்த நடைமுறையை மாற்ற வேண்டும். வாரத்தில் 5 நாட்கள் அரசு ஊழியர்கள் பணியாற்றினால் போதும் என்ற நடைமுறையை அமல்படுத்த வேண்டும். அரசு ஊழியர்களுக்கு தேவையற்ற விடுமுறைகள் வழங்கக்கூடாது.  இதனை முதல்-மந்திரி குமாரசாமி தனது ஆட்சியில் அமல்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

வாரத்தில் 6 நாட்களுக்கு பதிலாக 5 நாட்கள் அரசு ஊழியர்கள் பணியாற்றும் நடைமுறையை அமல்படுத்த கர்நாடக அரசு ஆலோசித்து வருவது குறிப்பிடத் தக்கதாகும்.  அமைச்சரின் கடிதம், முதல்வரின் ஆலோசனை மாநில அரசு ஊழியர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.