மதுவில் கிருமிநாசினியை கலந்து குடித்த 5 பேர் உயிரிழப்பு

திருப்பதி:

திருப்பதியில் மதுவில் கிருமிநாசினியை கலந்து குடித்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

திருப்பதி தூய்மை பணியாளர் காலனியைச் சேர்ந்தவர்கள் குமாரசாமி, வீரய்யா, வெங்கடரெத்தினம், சீனய்யா. இவர்கள் 4 பேரும் திருப்பதி மாநகராட்சியில் துப்புரவுப்பணியாளராக வேலை பார்த்து வந்தனர்.

இவர்கள் தினமும் வேலை முடிந்ததும், மாலை நேரத்தில் மது குடிப்பது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இவர்கள் 4 பேரும் தங்களுடன் பணியாற்றும் சக பணியாளர் ஒருவருடன் சேர்ந்து மது குடிப்பதற்காக திருப்பதி பஸ் நிலையம் அருகில் சென்றனர்.

5 பேர் மது குடிக்க போதுமான பணம் இல்லாததால் ஒரு குவாட்டர் பிராந்தி பாட்டில் மற்றும் சாலையோரம் விற்றுக் கொண்டிருந்த கிருமிநாசினியை (சானிடைசர்) வாங்கி, இரண்டையும் கலந்து குடித்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் மயக்கமடைந்து அடுத்தடுத்து கீழே விழுந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும், அவர்களின் குடும்பத்தினர் விரைந்து வந்து அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.