சேலம்-சென்னை பசுமை வழிச்சாலைக்கு எதிராக வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு: தீவிரமடையும் மக்கள் போராட்டம்

சேலம்:

சேலம்-சென்னை இடையே அமைக்கப்பட உள்ள  பசுமைவழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்படும்  5 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக்கொடி கட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த சாலை காரணமாக பாதிக்கப்படும் 5 மாவட்டத்தை சேர்ந்த மக்கள் போராட்டதை தீவிரப்படுத்தி வருகின்றனர்.  பல இடங்களில் சாலை அமைக்கும் பணிக்காக, இடங்களை அளந்து அதிகாரிகள் நட்டியலை கல்லை பெயர்த்து எறிந்து வீசி  உள்ளனர். மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

சேலம்-சென்னை இடையே 8வழி பசுமை வழி எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு அதற்கான பணிகளை நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுமார் 277 கிலோ மீட்டர் தொலைவு அமைய உள்ள  இந்த சாலைப் பணிக்காக  சேலம், தர்மபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில்  நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இந்த சாலை அமைக்கப்பட இருக்கும் காரணத்தால், ஏராளமான  விளைநிலங்கள், நீர் நிலைகள், மலைகள், பொதுமக்களின் வீடுகள், தென்னை, மாமர தோப்புகள் அழிக்கப்பட உள்ளது.

பசுமை வழிச்சாலை என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சாலைக்காக பசுமையான பகுதிகளை அழிக்க முயற்சிக்கும் அரசுக்கு எதிராக மக்கள் திரண்டு போராடி வருகின்றனர்.  பல இடங்களில் பொதுமக்கள் தங்களது நிலம் பறிபோவதை எண்ணி அழுது புலம்பி வருகிறார்கள்.  இதைக்கண்டுகொள்ளாத தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது. மேலும் பலர் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். மக்கள் தங்கள் எதிர்ப்புகளை பல வழிகளில் தெரிவித்தும். அரசு சாலையை அமைக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது.

இந்த நிலையில், சாலை பணிக்கு நிலம் வழங்க முடியாது என   5 மாவட்டங்களிலுள்ள கிராம மக்கள்  தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

இந்த நிலையில், இந்த சாலைப்பணி  திருவண்ணாமலை மாவட்டத்திலும் சுமார் 124 கிலோமீட்டர் தொலைவு அமைய உள்ளது. இதன் காரணமாக அந்த மாவட்டத்தை சேர்ந்த 92 கிராமங்கள் பாதிக்கப்படுவதாகவும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் உருவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலைப்பணியால் பாதிக்கப்படும் 5 மாவட்ட மக்கள் இன்று கருப்பு கொடி ஏற்றும் போராட்டத்தில் ஈடபட்டு வருகின்றனர். பசுமை வழிச்சாலை  திட்டத்தை கைவிட கோரி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம் ஆகிய 5 மாவட்ட மக்களும், விவசாயிகளும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி வைத்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் 92 கிராமங்களில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கறுப்பு கொடியை ஏற்றி தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டெர்லைட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தை தொடர்ந்து, தற்போது கிரின் எக்ஸ்பிரஸ் சாலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 5 district people black flag hoist protest against chennai salem green express way, சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை: பாதிக்கப்படும் மக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு
-=-