Random image

5 மருத்துவக்கல்லூரி முதல்வர் பணியிடங்கள் காலி: உடனே நியமிக்க மாணவ மாணவிகள் கோரிக்கை

சென்னை:

மிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 5 அரசு மருத்துவக்கல்லூரிகளில், முதல்வர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்று மாணவ மாணவிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில் 48 அரசு மருத்துவக்கல்லூரி  மருத்துவமனைகளும், ஒரு பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, ஒரு பன்னோக்கு  உயர்சிறப்பு மருத்துவமனை, 32 மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், 274 தாலுகா  மருத்துவ மனைகள், 1747 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8706 துணை சுகாதார  நிலையங்கள் உள்ளன.

476 நகர்ப்புற சுகாதார நிலையங்கள், 10 தொழிலாளர்  ஈட்டுறுதி மருத்துவமனைகள், 216 இஎஸ்ஐ டிஸ்பென்சரிகள், பாரம்பரிய  மருத்துவமனை மற்றும் மருந்தகங்கள் 1491ம் உள்ளன.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமையிட மருத்துவமனைகள், தாலுகா அளவிலான மருத்துவமனைகளில் மட்டும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர் பணியிடங்கள் காலியாக இருந்தன. அதுபோல மருத்துவ உதவியாளர்களும் பற்றாக்குறை நீடித்து வருகிறது.

இந்த நிலையில், தற்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் பதவியும் நிரப்பப்படாமல் உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரி, தூத்துக்குடி, தேனி, தஞ்சாவூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துக்கல்லூரிகளில், கடந்த 5 மாதங்களாகவே முதல்வர் பதவி காலியாக உள்ளது. தற்போது, அருகிலுள்ள மாவட்ட மருத்துவக்கல்லூரி முதல்வர்களே, பொறுப்பு முதல்வராக பதவி வகித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, காலியாக உள்ள 5 முதல்வர் பணியிடங்களுக்கு 17 பேரை சீனியாரிட்டி அடிப்படையில் தேர்வு செய்து, மருத்துவ கல்வி இயக்குநரகம், தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.  உடனே முதல்வர் நியமனம் செய்ய வேண்டும் என்று மருத்துவ மாணவ மாணவிகளும் அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளனர்.