அயோத்தி ராமஜென்மபூமி வழக்கின் தீர்ப்பை வழங்கிய 5 நீதிபதிகள் யார் யார்? அவர்களின் பின்னணி என்ன?

டெல்லி:

சுமார் 500ஆண்டுகளாக நீடித்து வந்த அயோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி விவகாரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று வரலாற்று சிறப்பு மிக்க ஒருமித்த  தீர்ப்பை வழங்கி உள்ளது.

இந்த 5 நீதிபதிகள் யார் யார், அவர்களின் நீதி பரிபாலனை என்ன  என்பதை பார்க்கலாம்.

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்:

உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்.  வடகிழக்கு மாநிலத்தில் இருந்து நாட்டின் உயர் நீதித்துறை பதவிக்கு வந்த முதல் நபர்.

1978ம் ஆண்டு தன்னை வழக்கறிஞராக  பதிவு செய்துகொண்டவர். ஹவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்று நிரந்தர  நீதிபதி ஆனார்.  பிப்ரவரி 28, 2001அன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதி மன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

2012ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவதற்கு முன்னர் அதன் தலைமை நீதிபதியாக ஆனார். 2018 அக்டோபர் உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார்.

இவர்,  நீதிபதியாக தன்  வாழ்க்கையில் பல முக்கிய வழக்குகளை விசாரித்து உள்ளார். தேசிய குடிமக்கள் பதிவேடு, அயோத்தி வழக்கு தீர்ப்பு என்று பல வழக்குகளை விசாரித்துள்ளார். 

நீதியரசர் எஸ்.ஏ. போப்டே

உச்சநீதி மன்றத்தில் அடுத்த தலைமை நீதிபதியாக அறிவிக்கப்பட்டுள்ளார். விரைவில் பதவி ஏற்க உள்ள சரத் அரவிந்த் பாப்டே எனப்படும் எஸ்.ஏ. பாப்டே மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர், கடந்த 2000ம் ஆண்டு மும்பை உயர்நீதி மன்ற நீதிபதியாக நியமிக்கப்ப்ட்டவர், 2013 ஏப்ரலில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். தற்போது உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக பணி உயர்வு பெற்றள்ளார். அவரது பதவிக்காலம்  முடிவடைவதற்கு முன் 18 மாதங்களுக்கு தலைமை நீதிபதியாக இருப்பார். ரஞ்சன் கோகய்  ஓய்வு பெற்றபின் இவரே தலைமை நீதிபதியாக செயல்படுவார்.

கடந்த 1956ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி பிறந்த  பாப்டே நாக்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஆவர். இவரது தாத்தா வழக்கறிஞராக இருந்தார். எஸ் ஏ போப்டேவின் தந்தை அரவிந்த் பாப்டே 1980 மற்றும் 1985 ஆம் ஆண்டுகளில் மகாராஷ்டிராவின் அட்வகேட் ஜெனரலாக உயர் பதவி வகித்தவர்.

நீதியரசர் டி.ஒய். சந்திரசூட்

இந்தியாவின் நீண்ட காலம் தலைமை நீதிபதியாக இருந்த ஒய்.வி. சந்திரசூட்டின் மகன் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உச்சநீதிமன்ற நீதிபதியாக  2016மே மாதம்  அப்போதைய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியால் நியமிக்கப்பட்டவர். இதற்கு முன்பு பம்பாய்  உயர் நீதிமன்றத்திலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றினார். ஹர்வர்ட் சட்டக்கல்லூரியில் பட்டதாரியானவர். தனிமனித உரிமைக்கான சில தீர்ப்புகள், வயது வந்தோர்கான தீர்ப்புகளை வழங்கியுள்ளார். பம்பாய்  உயர் நீதிமன்றத்திலும் அலகாபாத் உயர் நீதிமன்றத்திலும் பணியாற்றினார்.

நீதியரசர் அசோக் பூஷண்

1979 ஆம் ஆண்டில் தனது வழக்கறிஞர் வாழ்க்கையை தொடங்கிய அசோக் பூஷண், அலகாபாத் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். 2001ம் ஆண்டு ஏப்ரல் மாதம், நீதிபதியாக பதவி உயர்த்தப்பட்டார். அதையடுத்து, 2014ம் ஆண்டு ஜூலை  மாதம், கேரளா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு பின்னர், மார்ச் 2015ல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.  2016ம் ஆண்டு மே மாதம் 13ந்தேதி உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

நீதியரசர் அப்துல் நசீர்

1983ம் ஆண்டு வழக்கறிஞராக சேர்ந்த அப்துல் நசீர்,  கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 20 ஆண்டுகள் பயிற்சி பெற்றார். 2003ம் ஆண்டு  நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். பிப்ரவரி 17, 2017 அன்று உச்ச நீதி மன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

முத்தலாக் நடைமுறையை நீதிபதி ஜே.எஸ்.கெஹருடன் இணைந்து “இறையியலின் பாவம்” என்று தீர்ப்பளித்து பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.