சென்னை:  5கிலோ தங்கம், ரூ.120 கோடி வெளிநாட்டில் முதலீடு உள்பட கோடிக்கணக்கான மதிப்புக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், இயேசு விடுவிக்கிறார் தலைவர் பால் தினகரன் அடுத்தவாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி  வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.

பிரபல கிறிஸ்துவ மத போதகரான பால் தினகரன், ‘இயேசு அழைக்கிறார்’ என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பல இடங்களில் கிறிஸ்துவ ஜெப கூட்டங்களை நடத்தி வருகிறார். கோவையில் கல்வி நிறுவனங்களை பால் தினகரன் நடத்தி வரும் நிலையில், சென்னையிலும் இவருக்கு சொந்தமாக அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் சில இயங்கி வருகின்றன. அது மட்டுமில்லாமல், தமிழகத்தில் மேலும் சில இடங்களில் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களும் உள்ளன.

இந்நிலையில், சென்னையில் பாரிமுனை, அடையாறு உள்ளிட்ட இடங்களில் அமைந்துள்ள பால் தினகரனின் அலுவலகங்கள், கோவையில் நடத்தி வரும் காருண்யா பல்கலைக்கழகம், பள்ளி உட்பட மொத்தம் 28 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை அடையாறில் ‘இயேசு அழைக்கிறார்’ தலைமை அலுவலகம் அமைந்துள்ள நிலையில், சென்னை பாரிமுனை கடற்கரை சாலையில் பெரிய கட்டிடம் ஒன்றும் அமைந்துள்ளது. இந்த இடங்களில் எல்லாம் வருமானத்துறை அதிகாரிகள் சோதனையை மேற்கொண்டனர்.

பால் தினகரனுக்கு சொந்தமான காருண்யா பல்கலைக்கழகம் அருகே தான் இவரது வீடு, அலுவலகம், ஜெபக்கூடம் மற்றும் பள்ளி ஆகியவை அமைந்துள்ளது. காருண்யா பெதஸ்தா என அழைக்கப்படும் இங்கு;k. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

கோவை புலியகுளத்தை அடுத்த அம்மன்குளம் பகுதியில் காருண்யா கிறிஸ்துவ பள்ளி ஒன்று உள்ளது. இங்கும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதே போல லட்சுமி மில் அருகே ஜெபக்கூடம் ஒன்று உள்ளது. அங்கு அதிகாரிகள் சோதனை நடத்த வந்த நிலையில், ஆட்கள் யாரும் அங்கு இல்லாததால் அவர்கள் சோதனை நடத்தாமல் திரும்பிச் சென்றனர்.

மொத்தமாக, இந்த வருமான வரி சோதனையில் இன்று 250 க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்ட நிலையில், காலை 8 மணி முதல் 28 இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். இந்த இடங்களில் எல்லாம் வெளியே இருந்து யாரையும் அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. அதே போல, சோதனை நடந்த இடங்களில் இருந்து யாரையும் வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை.

பால் தினகரனின் நிறுவனங்கள் முறையாக வரி கட்டாமல் வரி ஏய்ப்பு செய்ததாக வந்த புகாரின் பெயரில் இந்த சோதனை நடைபெற்றதாக வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுவரை நடத்தப்பட்ட சோதனையில்,   5கிலோ தங்கக்கட்டிகள், 120கோடி வெளிநாட்டில் முதலீடு உள்பட பலஆயிரம் கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காருண்யா வளாகத்தில் நடந்த சோதனையில் 5 கிலோ தங்கம் கை பற்றப்பட்டது. மேலும்,  கணக்கில் வராத ரூ.120 கோடிக்கான முதலீடு கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து,  பால் தினகரனுக்கு வருமான வரித்துறை சம்மன் அனுப்பி உள்ளது.  சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் அடுத்த வாரம் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவிக்கப்பட்டு உள்ளது.