டில்லி

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டையொட்டி மேலும் பல தடுப்பூசிகளுக்கு அவசரக்கால அனுமதி அளிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

இந்தியாவில் கொரோன தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.   இதற்காக இந்திய அரசு 2 தடுப்பூசி மருந்துகளுக்கு அவசரக்கால அனுமதி அளித்துள்ளது.   கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் என பெயருள்ள அந்த இரு மருந்துகளுக்கும் சமீப காலமாகத் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது.   இதனால் பல மாநிலங்களில் தடுப்பூசி போடும் பணி தடைப்பட்டுள்ளது.

மத்திய அரசு இதைச் சமாளிக்க கொரோனா தடுப்பூசி உற்பத்தி பணியை அதிகரிக்க உத்தரவிட்டுள்ளது.   இதைத் தவிர மேலும் ஐந்து உற்பத்தியாளர்களிடம் இருந்து தடுப்பூசி மருந்துகள் வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.  இந்த நடவடிக்கை வரும் அக்டோபருக்குள் முடிவடைந்து இந்தியாவில் மேலும் 5 நிறுவன தடுப்பூசி மருந்துகள் கிடைக்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் ரஷ்யாவின் தடுப்பூசியான ஸ்புட்னிக் இன்னும் 10 நாட்களில் மக்களுக்குக் கிடைக்கலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.  மீதமுள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன தடுப்பூசி, நோவாவாக்ஸ் நிறுவன தடுப்பூசி, ஸைடஸ் காடிலாஸ் நிறுவன தடுப்பூசி  பாரத் பயோடெக் தயாரிக்கும் மூக்கு வழி தடுப்பு மருந்து ஆகியவற்றுக்கு மருத்துவ சோதனைகள் நடைபெற உள்ளன.