5 புதிய மாவட்டங்கள்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை:

மிழகத்தில் புதியதாக 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்படுவதாக தமிழகஅரசு சட்டமன்றத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான அரசாணையை தமிழகஅரசு வெளியிட்டு  உள்ளது.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, மதுரை, நெல்லை உள்பட 32 மாவட்டங்கள் நடைமுறையில் இருந்து வந்தன. இதில் பல மாவட்டங்களில் பெரியதாக இருந்ததால், அதை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரிக்க கோரிக்கைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, சில மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சட்டமன்ற தொடரின்போது குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில்,  புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; வேலூரை பிரித்து வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 3 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் புதிதாக வேலூர், குடியாத்தம் என புதிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  வேலூர், அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, மற்றும் கே.பி.குப்பம் ஆகிய 6 வட்டங்கள் வேலூர், மாவட்டத்தில் அடங்கும்.  வேலூர் மற்றும் குடியாத்தம் இரண்டும் வருவாய் கோட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளன.

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி ஆகிய இரண்டும் வருவாய் கோட்டங்களாக செயல்படும். திருப்பத்தூர், வாணியம்பாடி, நாற்றாம்பள்ளி மற்றும் ஆம்பூர் ஆகிய 4 இடங்களும் புதிய வட்டங்களாக செயல்படும். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ராணிப்பேட்டை, அரக்கோணம் ஆகிய இரண்டு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜாபாத், ஆற்காடு, நெமிலி மற்றும் அரக்கோணம் ஆகியவை புதிய வட்டங்களாக செயல்படும். காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீபெரம்பத்தூர், என 2 வருவாய் கோட்டம், 5 தாலுகாக்கள் வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டு புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், உத்திரமேரூர், ஸ்ரீபெரம்பத்தூர், வாலாஜாபாத், குன்றத்தூர் தாலுகாக்கள் காஞ்சிபுரத்தில் வருகின்றன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் என 3 வருவாய் கோட்டங்கள் வருகின்றன. செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், வண்டலூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், உள்ளிட்ட 8 தாலுகாக்கள் செங்கல்பட்டு மாவட்டத்தில் வருகிறது.

மேலும் நெல்லை மாவட்டத்தை பிரித்து நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை, மானூர், நாங்குநேரி, சேரன்மகாதேவி, ராதாபுரம், அம்பாசமுத்திரம், திசையன்விளை ஆகிய தாலுகாக்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தின் கீழ் சங்கரன்கோவில், செங்கோட்டை, கடையநல்லூர், சிவகிரி, வி.கே புதூர், திருவேங்கடம், ஆலங்குளம் ஆகிய தாலுகாக்கள் செயல்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் அரசாணையைத் தொடர்ந்து தமிழகத்தில் மாவட்டங்களின் எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது.