தமிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள்: ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை:
மிழகத்தில் மேலும் 5 புதிய வருவாய் வட்டங்கள் ரூ.4 கோடியில் அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
tamilnadu
முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” அனைத்து துறைகளுக்கும் தாய்த் துறையாக விளங்கி வருவது வருவாய்த் துறை ஆகும். இத்துறையின் பணிச்சூழலை மேம்படுத்தும் பொருட்டும், பொதுமக்களின் வசதியை கருத்தில் கொண்டும், கடந்த 5 ஆண்டுகளில் 7 மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள், 6 கோட்டாட்சியர் அலுவலகங்கள், 64 வட்டாட்சியர் அலுவலகங்கள், 54 வருவாய் ஆய்வாளர்களுக்கான அலுவலகங்களுடன் கூடிய குடியிருப்புகள், 231 கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அலுவலகங்கள் மற்றும் 15 இதர கட்டடங்கள் என மொத்தம் 377 கட்டடங்கள் 356 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எனது தலைமையிலான அரசால் கட்டப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, நடப்பாண்டில்  16 வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு 48 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டடங்கள் கட்ட உத்தரவிட்டுள்ளேன்.
மக்களை நாடி அரசு என்ற எனது தலைமையிலான அரசின் கொள்கைக்கேற்ப, மக்களை நாடி வருவாய்த் துறையின் சேவை அதிவிரைவாக கிடைத்திடும் வகையில், கடந்த 5 ஆண்டுகளில், 9 புதிய கோட்டங்களும், 65 புதிய வட்டங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில், கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தைப் பிரித்து ஸ்ரீமுஷ்ணத்தில் ஒரு புதிய வட்டம், அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையார்பாளையம் வட்டத்தினைப் பிரித்து ஆண்டிமடத்தில் ஒரு புதிய வட்டம், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் வட்டத்தைப் பிரித்து கூத்தாநல்லூரில் ஒரு புதிய வட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி மற்றும் ஒட்டப்பிடாரம் வட்டங்களை சீரமைத்து கயத்தாரில் ஒரு புதிய வட்டம், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் வட்டத்தினைப் பிரித்து சிங்கம்புணரியில் ஒரு புதிய வட்டம் என மொத்தம் 5 புதிய வட்டங்கள் உருவாக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.
இதற்கென 4 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.  இத்திட்டங்களினால் பொதுமக்களுக்கு வருவாய்த் துறையினரின் சேவை விரைந்து கிடைக்கவும், வருவாய்த் துறையினர் தங்கள் சேவையை எளிதாகவும், விரைவாகவும், திறம்படவும் பொதுமக்களுக்கு வழங்கவும் வழி ஏற்படும்” என்று கூறியுள்ளார்.