டில்லி

பாஜக ஆட்சி புரியாத 5 மாநிலங்களுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி பங்கு திருப்பி அளிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டி உள்ளன.

ஜிஎஸ்டி வரியில் 50% மத்திய அரசுக்கும் 50% மாநில அரசுக்கு எனப் பங்கு உள்ளது.   நாம் வாங்கும் பில்களில் அவை தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காண முடியும்.   இவ்வாறு வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளில் பாதியை அந்தந்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒரு மாத காலக் கெடுவில் திருப்பி அளித்து விடும்.  ஆனால்  தற்போது பாஜக ஆட்சி புரியாத ஐந்து மாநிலங்கள் இது குறித்து புகார் எழுப்பி உள்ளன.

டில்லி, பஞ்சாப், ராஜஸ்தான், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் பாஜக ஆட்சி புரியவில்லை எனினும் இந்த மாநிலங்கள் அனைத்தும் ஜிஎஸ்டி கூட்டங்களில் பங்கு பெற்றுப் பல ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை அறிவுறுத்தி வருகின்றன.    ஜிஎஸ்டி  குழுவினரின் பல முடிவுகளுக்கு இந்த மாநிலங்கள் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதத்தில் இருந்து ஜிஎஸ்டி பங்கு தங்கள் மாநிலங்களுக்கு அளிக்கப்படவில்லை என இந்த ஐந்து மாநிலங்கள் அளித்துள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளன.  மேலும் இந்த நிலுவைத் தொகை அக்டோபருக்குள் மத்திய அரசு அளிக்க வேண்டும் எனவும் ஆனால் நவம்பர் ஆகியும் இன்னும் அளிக்காமல் உள்ளதால் தங்கள் மாநிலத்தில் கடும் நிதிப்பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவித்துள்ளன.

மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ரா, “இது குறித்து நாங்கள் நேரடியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தெரிவித்து இதைக் கவனிக்கச் சொல்ல முடிவு செய்தோம்.   தற்போதுள்ள நிலையில் ஜிஎஸ்டி பங்கு நிதித் தொகை கிடைக்காததால் அனைத்து மாநிலங்களும் கடுமையாக பாதிக்கபட்டுள்ளன.  இதுவரை வர வேண்டிய நிதித்தொகையை மத்திய அரசு எப்போதும் நிறுத்தி வைத்ததில்லை.   எங்கள் மாநிலத்துக்கு ரூ1500 கோடி பாக்கி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதைப்போல் கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தங்கள் மாநிலத்துக்கு வரவேண்டிய ரூ.1600 கோடி ஜிஎஸ்டி நிலுவையால் கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது எனவும்  இதுவரை மாநிலத்தில் இப்படி ஒரு நிலை ஏற்பட்டது இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.   பஞ்சாப் நிதி அமைச்சர் மன்பிரீத் சிங் பாதல் தங்கள் மாநிலத்துக்கு ரூ.2100 கோடி பாக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதைப் போல் டில்லி மற்றும் ராஜஸ்தான் மாநில நிதி அமைச்சர்களும் கூறி உள்ளனர்.