மாஸ்கோ: ரஷ்யாவில் இந்திய – சீன வெளியுறவு அமைச்சர்களிடையே நடைபெற்ற 2.5 மணிநேர இருதரப்பு பேச்சுவார்த்தையில், இருநாடுகளுக்கு இடையிலான பதற்றமான மற்றும் நெருக்கடியான சூழலைத் தவிர்க்கும் வகையில், 5 அம்ச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இருதரப்பு உரையாடல், வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் அமைந்தது என்று இருநாட்டு வெளியுறவு அமைச்சகங்கள் சார்பில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்திய – சீன உறவு மேம்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இருநாடுகளுமே, ஒருமித்த கருத்தை எட்டிய தலைவர்களிடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற வேண்டுமென்றும், வேறுபாடுகள் சச்சரவுகளாக வளர்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தற்போது இருநாடுகளுக்கிடையே நிலவும் இறுக்கமானது, இருதரப்புமே விரும்பாத ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“இருநாடுகளின் எல்லைப்புற படைகள், தங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையை தொடர வேண்டுமெனவும், விரைவில் படைவிலக்கம் செய்யப்பட்டு, எல்லையில் பொருத்தமான இடைவெளியைக் கடைப்பிடித்து, பதற்றத்தைத் தணிக்க வேண்டும்” என்றும் இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.