5%இட ஒதுக்கீடு: ராஜஸ்தானில் குஜ்ஜார் மக்கள் ரெயில் மறியல்: போக்குவரத்து பாதிப்பு

ஜெய்ப்பூர்:

டஒதுக்கீடு கேட்டு  குஜ்ஜார் சமூகத்தினர் ராஜஸ்தான் மாநிலத்தில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இன்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பெரும் பாதிப்படைந்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு வகுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு முறை கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் மத்திய அரசு, உயர்வகுப்பினரில் பொருளாதாரத்தில் பின் தங்கிய வர்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கொண்டு வந்தது. இது சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது ராஜஸ்தானை சேர்நத குஜ்ஜார் சமூகத்தினர் தங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும் என்று போராட்டத்தில் குதித்து உள்ளனர்.

ஏற்கனவே கடந்த 2007ம் ஆண்டு முதல் அவ்வப்போது கல்வி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என குரல் கொடுத்து வந்த குஜ்ஜார் சமுகத்தினர்,  தற்போது போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே அரசு  அளித்த வாக்குறுதிபடி, 5 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, மீண்டும் ரெயில்  மறியல் போராட்டத்தை தொடங்கி உள்ளனர்.  சாலை மறியல் மற்றும் ரெயில் மறியல் போராட்டங்கள் தீவிரமாக நடத்தினர். இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டடுள்ளது.

நேற்று முதல் தண்டவாளத்தில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக 4 ரெயில்கள், சேர வேண்டிய இடங்களுக்கு முன்னதாகவே நிறுத்தப்பட்டன. 7 ரெயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. ஒரு ரெயில் ரத்து செய்யப்பட்டது.  இன்றும் ரெயில் மறியல் போராட்டம் நீடிக்கிறது. இதன் காரணமாக இன்றும் மும்பை-டெல்லி வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இன்று 5 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.