தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 5% இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை:

த்தியஅரசு நீட் தேர்வு மூலம் மருத்துவப்படிப்புக்கு மாணவர்களை தேர்வு செய்து வரும் நிலையில்,  கர்நாடகாவைப் போல தமிழகத்திலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள நீட் தேர்வை, மாநில மொழிகளில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ள சிரமப்படப் வேண்டியது உள்ளது. இதனால் கர்நாடகா உள்பட சில மாநிலங்கள், தங்களது மாநில மொழியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 5% இடஒதுக்கீடு செய்ய சட்டம் கொண்டு வந்துள்ளது.

இந்த நிலையில், கர்நாடகாவைப் போல தமிழகத்திலும்,  மருத்துவப் படிப்பில் 5 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, தர்மபுரி அரூர் பெரியார் நகரைச் சேர்ந்த என்.முருகேசன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுதோறும், 5,400 மாணவர்கள் சேர்க்கப்படும் நிலையில், 12ம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வி படித்தவர்கள் பெரும்பாலும் 5 சதவிகிதத்திற்கும் குறைவாகவே சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு, தமிழ் வழியில் பள்ளிப் படிப்பை முடித்த 106 மாணவர்கள் மட்டுமே, மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளதாக, தகவல் உரிமை சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்தின் மூலம் தெரிய வந்துள்ளது. இது, மாணவர்களை தமிழ் வழி படிப்பில் இருந்து ஆங்கில வழி கல்விக்கு மாற்றுவதுடன், தமிழ் மற்றும் ஆங்கில வழிக் கல்வியில் படித்தவர்களிடையே பாரபட்சத்தை ஏற்படுத்தும் .எனவே,  நீட் நுழைவுத் தேர்வில், தமிழ் வழிக்கல்வியில் படித்தவர்கள் மொழிச் சிறுபான்மையினர் என்பதால், தமிழ் வழி படித்த மாணவர்களின் நம்பிக்கையயும், நலனையும் பாதுகாக்கும் வகையில், இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து தமிழகஅரசின் சுகாதாரத்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, மருத்துவ கல்வி இயக்குனரகம்  வரும் 20ந்தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.