‘5ரூபாய் டாக்டர்’ வண்ணாரப்பேட்டை ஜெயச்சந்திரன் காலமானார்

வண்ணாரப்பேட்டை:

5 ரூபாய் டாக்டர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட வந்த வண்ணாரப் பேட்டை மருத்துவர் ஜெயச்சந்திரன் காலமானார்.

மக்கள் மருத்துவர், சமூக சேகர், 5 ரூபாய் டாக்டர், கைராசி டாக்டர் என்று பல்வேறு முகங்களை கொண்ட மருத்துவர் ஜெயச்சந்திரன் (வயது 71)  வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இந்த நிலையில், இன்று காலமானார்.

இவரது சொந்த ஊர் கல்பாக்கம் அருகே உள்ள கொடைப்பட்டினம் என்ற கிராமம். ஆனால், இவர் சென்னை மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படித்து, மிகவும் பின்தங்கிய வடசென்னை மக்களுக்கு மருத்துவ சேவை அளிப்பதற்காகவே வென்னை வண்ணாரப்பேட்டை பகுதியில் கிளினிக் வைத்து சேவையாற்றி வந்தார்.

தொடக்கத்தில் மருத்துவம் பார்க்க ரூ.2 மட்டுமே பெற்றுவந்த டாக்டர் ஜெயச் சந்திரன் பின்னர் 5 ரூபாய் வாங்கி வந்தார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வடசென்னையில் அவரது மருத்துவ சேவை தொடர்ந்து வந்தது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டதும், அது வட சென்னைக் கும் தேவை என்று கூறி, மக்களை திரட்டி போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்தே மெட்ரோ சேவை திருவொற்றியூர் வரை நீட்டிக்கப்பட்டது.

இவரது மனைவியும் மருத்துவரே. இவர் அரசு ராஜீவ்காந்தி பொது மருத்துவமனை யில் ஆர்.எம்.ஓ.வாக இருந்து ஓய்வு பெற்றவர்.

1000க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களை நடத்திய டாக்டர் ஜெயச்சந்திரன்,   ‘மகப்பேறும் மாறாத இளமையும்,’குழந்தை நலம் உங்கள் கையில்’, ‘தாய்ப்பால் ஊட்டுதலின் மகத்துவம்’, ‘உடல் பருமன் தீமைகளும் தீர்வுகளும்’ என்ற நூல்களை யும் எழுதி உள்ளார்.

மக்களின் நம்பிக்கைக்கு உரிய மருத்துவர் ஜெயச்சந்திரன் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவரது மறைவு ராயபுரம், வண்ணாரப் பேட்டை உள்பட வடசென்னை மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.