5மாநில சட்டமன்ற தேர்தல்: 3 மாநிலத்தில் காங்கிரஸ் வெற்றி! கருத்து கணிப்பில் தகவல்

டில்லி:

டைபெற உள்ள 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்று தேர்தல் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மிசோரம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. நாளை சத்திஸ்கர் மாநிலத்தில் முதல்கட்ட தேர்தல் தொடங்குகிறது.

இந்த நிலையில், சி-வோட்டர்ஸ் நிறுவனம் நடத்திய கருத்துக்கணிப்பில், 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என்றும் தெரிய வந்துள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி

தற்போது பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் 47.9 சதவீத வாக்குகளுடன் 145 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் என்றும், பாஜக 39.7 சதவீத வாக்குகளுடன் 45 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி

230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 42.3 சதவீத வாக்குகளுடன் 116 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி தனி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அதேவேளையில், பாஜக 41.5 சதவீத வாக்குகளுடன் 107 தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் கூறி உள்ளது.

சந்திஸ்கரில் பாஜ-காங்கிரஸ் இழுபறி

90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது.

காங்கிரஸ் கட்சி 42.2 சதவீத வாக்குகளுடன் 41 தொகுதிகளில் வெற்றி பெறும். பாஜகவின் வாக்கு சதவீதம் 41.6-ஆக சற்று குறையும். எனினும், 43 தொகுதிகளில் அக்கட்சி வெற்றி பெறும். மற்ற வேட்பாளர்கள் 6 தொகுதிகளில் வெற்றி பெறுவர் என்றும் தெரிவித்து உள்ளது.  பாஜக அல்லாத கட்சியினர் காங்கிரசுக்கு ஆதரவு அளிக்கும்பட்சத்தில், காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக கூறி உள்ளது.

மிசோரம் மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. 40 தொகுதிகளைக் கொண்ட மிசோரமில், மிசா தேசிய முன்னணி 17 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களிலும், மிசோரம் மக்கள் இயக்கம் 9 இடங்களிலும் வெற்றி பெறும் என்று சி-வோட்டர்ஸ் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில், காங்கிரஸ்-தெலுங்கு தேசம் கூட்டணி 64 தொகுதி களில் வெற்றி பெறும் என்று தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக  அங்கும் இழுபறி நீடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

சிஎன்எக்ஸ் கருத்துக்கணிப்பில்,  ராஜஸ்தானில் காங்கிரஸ் 115 தொகுதிகளிலும், பாஜக 75 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கிறது. அதேவேளையில் காங்கிரஸ் 110 தொகுதிகளிலும், பாஜக 84 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் 95 இடங்களிலும், பாஜக 122 இடங்களிலும் வெற்றி பெறும் என்று சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

காங்கிரஸ் 105 இடங்களையும், பாஜக 116 இடங்களையும் கைப்பற்றும் என்று சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பு கூறுகிறது.

சத்தீஸ்கரில், காங்கிரஸ் 30 இடங்களிலும், பாஜக 50 இடங்களிலும், மற்ற வேட்பாளர்கள் 10 இடங்களிலும் வெற்றி பெறுவர் என்று சிஎன்எக்ஸ் கருத்துக் கருப்பில் கூறி உள்ளது.

காங்கிரஸ் 25 இடங்களிலும், பாஜக 56 இடங்களிலும், இதர வேட்பாளர்கள் 9 இடங்களிலும் வெற்றி பெறுவர் என்று சிஎஸ்டிஎஸ் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தற்போது வெளியாகி வரும் பெரும்பாலான கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமாக இறுதிக்கட்சி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியின் இடைவிடாத சுற்றுப்பயணம், மக்களோடு மக்களாக இணைந்து பழங்கும் அவரது நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும், நம்பிக்கையும் பெற்றுள்ளதாக காங்கிரஸ் தொண்டர்கள் கூறி உள்ளனர்.

கருத்துக்கணிப்பு குறித்து செய்தியாளர்களை சந்தித்துபேசிய  காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலாகூறும்போது,  ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்றும்  தெலங்கானாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி மலரும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

கார்ட்டூன் கேலரி