5மாநில தேர்தல் முடிவுகள்: மவுனம் சாதித்த மோடி

டில்லி:

நாடு முழுவதும் இன்றைய தினம்  மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக, 5 மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருவதால், பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் கட்சிகள், அண்டை நாடுகள் அனைத்தும் இன்றைய தேர்தல் முடிவுகளை உற்றுநோக்கி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், இன்று  நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரும் தொடங்கி உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் 23 சட்ட முன்வடிவுகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளன. தேசிய மருத்துவ ஆணைய சட்ட முன்வடிவு, மோட்டார் வாகன சட்டத்திருத்த முன்வடிவு போன்றவையும் இதில் அடங்கும். இவை தவிர புதிதாக 20 சட்டமுன்வடிவுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன

ஏற்கனவே கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ரஃபேல் போர் விமானம் குறித்த விவாதம் புயலை கிளப்பி உள்ள நிலையில், தற்போதைய கூட்டத்தொடர் மேலும் பல எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும் சூழல் உருவாகி உள்ளது.

ரஃபேல் விமான ஊழல் பிரச்சினையுடன், ரிசர்வ் வங்கி கவர்னர் ராஜினாமா,  சிபிஐ இயக்குனர் கள் மாற்றம், மேகதாது பிரச்சினை போன்ற பிரச்சினைகளும் நாடாளுமன்றத்தை முடக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  அதேவேளையில்,  தற்போதைய தேர்தல் முடிவுகளும் ஆளும் மோடி அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்துக்கு வருகை தந்த பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வ மாக நடக்க எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அத்துடன் மக்களின் அனைத்து பிரச்னைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது எனவும் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் 5 மாநில தேர்தல் முடிவு கள் குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் எதுவும் பேசவில்லை தேர்தல் முடிவு பற்றி கருத்து கூற பிரதமர் மோடி மறுப்பு தெரிவித்து மவுனமாக சென்றார்.

இது  செய்தியாளர்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.