5மாநில தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலை பாதிக்காது: ராம்விலாஸ் பஸ்வான்

டில்லி:

5மாநில தேர்தல் முடிவுகள், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  நாடாளுமன்ற தேர்தலை பாதிக்காது என்று லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் கூறி உள்ளார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்துள்ள சத்திஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜக படுதோல்வி அடைந்தது. ம.பி., ராஜஸ்தான், சத்திஸ்கரில்  காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றி உள்ள நிலையில், மிசோரம் மற்றும் தெலுங்கானாவில் மாநில கட்சிகள் ஆட்சி அமைத்துள்ளன.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  லோக் ஜனசக்தி கட்சி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான் பாஜகவுக்கு வக்காலத்து வாங்கி உள்ளார்.

5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு, மக்களவைத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று  என்று கூறி உள்ளார். பாஜகவின் ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆளுங்கட்சிக்கு எதிரான மனநிலை காணப்பட்டது. அதன் காரண மாகவே, அந்த மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

இருந்தபோதிலும், மத்தியப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்கு சதவீதத்துக்கு நிகராக பாஜகவுக்கு வாக்குகள் கிடைத்துள்ளன என்றவர்,  பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும்.

நடந்து முடிந்த பேரவைத் தேர்தலில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. அந்த மாநிலங்களில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை அக்கட்சி நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.

இவர் பாஜகவின்  கூட்டணி கட்சி  என்பதும், மத்திய அமைச்சராக இருந்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.