5மாநில தேர்தல் கருத்துக்கணிப்பு: 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்! பாஜக அதிர்ச்சி

டில்லி:

டைபெற்று முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு குறித்து கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு ஊடகமும் வெவ்வேறு வகையில் தங்களது கருத்துக்கணிப்பு களை வெளியிட்டு வருகின்றன.

இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்புகளில் காங்கிரஸ் கட்சி அதிக இடத்தை பிடிக்கும் வாய்ப்பு இருப்பதாகவே தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்திஸ்கர், மிசோரம் மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றிபெற பிரகாஷமான வாய்ப்பு உள்ளது தெரிய வந்து உள்ளது. இது பாஜக தலைமைக்கு கடுமையான அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த 5 மாநில தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோடியாக கருதப்படுவதால், இந்த தேர்தல் முடிவுகள் உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்பை உருவாக்கி உள்ளது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், சத்திஸ்கர் மற்றும் தெலுங்கானா மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தல் தேதி கடந்த அக்டோபர் 6ந்தேதி தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார்.

அதைத்தொடர்ந்து,  சத்தீஸ்கர் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. கடந்த நவம்பர் 12ந்தேதி அன்று 18 தொகுதிகளுக்கும், நவம்பர் 20ந்தேதி 72 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைற்றது.

மத்திய பிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலத்திலும் ஒரே கட்டமாக  நவம்பர் 28ந்தேதி மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.

ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில்  டிசம்பர் 7ந்தேதி (நேற்று) வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுஉள்ளது.

இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளது. இதில், காங்கிரசின் வளர்ச்சி அமோகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. குறைந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா டுடே, டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் என்ன சொல்கிறது என்பதை பார்க்கலாம்..

சத்தீஷ்கர் – காங்கிரஸ்

சத்தீஷ்கர் மாநிலத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்குள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 45 தொகுதிகளுக்கும் அதிகமாக பெற்று ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் 45 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும், இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் 65 இடங்கள் வரை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும், சிவோட்டர் கருத்துக் கணிப்பில் 50 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் என்றும் தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக  சத்திஸ்கர் மாநிலத்தில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிப்பது உறுதியாகி உள்ளது.

மிசோரம் – காங்கிரஸ்

40 தொகுதிகளை கொண்ட மிசோரம் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கருத்துக் கணிப்பின் படி, முதல்வர் லால் தான்ஹவ்லா தலையிலான காங்கிரஸ் கட்சியே மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என தெரிய வந்துள்ளது.

இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் 22 இடங்கள் வரை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும், சிவோட்டர் கருத்துக் கணிப்பில் 20 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் என்றும் தெரிய வந்துள்ளது. இதன் காரணமாக   மிசோரத்தில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியபிரதேசம் – காங்கிரஸ் வாய்ப்பு

மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 2003ம் ஆண்டு முதல் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.  சிவ்ராஜ் சிங் சவுகான் முதல்வராக இருந்து வருகிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளர் யாரும் அறிவிக்கப்படாத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது.

மத்திய பிரதேசத்தில் 230 தொகுதிகளில் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளன.  டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் 90 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும், இந்தியா டுடே கருத்துக் கணிப்பில் 122 இடங்கள் வரை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும், சிவோட்டர் கருத்துக் கணிப்பில் 126 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் என்றும் தெரிவித்து உள்ளது. ரிபப்ளிக் டிவி115 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் அறிவித்து உள்ளது. அங்கு பாஜகவை வீழ்த்தும் வகையில், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் உதிரிக்கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் அரியணை ஏறும் வாய்ப்பு உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் – காங்கிரஸ்

ராஜஸ்தான் மாநிலத்தில் 200 தொகுதிகளில் 199 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. இங்கு  வசுந்தர ராஜே சிந்தியா தலைமையிலான பாஜக ஆட்சி  நடைபெற்று  வருகிறது.  இங்கு  ஏற்கனவே நடைபெற்ற இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற நிலையில், சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என நம்பப்படுகிறது.

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் 105 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளது. அதுபோல  இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் 122 இடங்கள் வரை காங்கிரஸ் கைப்பற் றும் என்றும், சிவோட்டர் கருத்துக் கணிப்பில் 145  இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் என்றும் தெரிவித்து உள்ளது. ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் 103 இடங்கள் காங்கிரசுக்கு என்றும் நியூஸ் எக்ஸ் கருத்துக்கணிப்பில் 112 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றும் என்றும் தெரிய வந்ததுள்ளது.  இதன் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு மூடுவிழா நடைபெறுவது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தெலங்கானா – ராஸ்டிரிய சமீதி கட்சி

தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியே மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

119 தொகுதிகளைக் கொண்டுள்ள தெலுங்கானா மாநிலத்தில் பெரும்பாலான இடங்களை சந்திர சேகரராவ் கட்சியே கைப்பற்றும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.

டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பில் டிஆர்எஸ் கட்சி  66 இடங்களை  கைப்பற்றும் என்று தெரிவித்து உள்ளது. அதுபோல  இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் 91 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும், சிவோட்டர் கருத்துக் கணிப்பில் 60  இடங்கள் என்றும் என்றும், ரிபப்ளிக் டிவி கருத்துக்கணிப்பில் 64 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளன.

இதன் காரணமாக தெலுங்கானா மாநிலத்தில் டிஆர்எஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என்பது உறுதியாகி உள்ளது.

நடந்து முடிந்திருக்கும் 5 மாநிலங்களிலும், சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு இறங்கு முகத்தையே காட்டுகிறது. இதன் காரணமாக, பாஜக தலைமை அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளது.