திண்டுக்கல்: வெட்டுக்கிளிகளின் தாக்குதலால் சுமார்  50 ஏக்கர் சோள பயிர்கள் நாசமாகி உள்ளதாக திண்டுக்கல் பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஒருபுறம்  மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில்,  மற்றொருபுறம் பாலைவன வெட்டுக்கிளிகள் விவசாயிகளை மிரட்டி வருகிறது. இந்த பாலைவன  வெட்டுக்கிளிகள்  கடந்தசில மாதங்களுக்கு முன்பு  ராஸ்தான், உ.பி.யில் விவசாய பயிர்களை நாசமாக்கிய நிலையில், கேரள பகுதிகளிலும்,  தமிழக எல்லைப் பகுதிகளிலும் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்ததாக கூறப்பட்டது.
இந்த வெட்டுக்கிளிகள்  கூட்டம்   நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் காணப்பட்டதால், இதுகுறித்து விவசாயிகள் தமிழக அரசுக்கு  தகவல் தெரிவித்தனர். அதையடுத்து,அங்கு சென்ற விவசாயத்துறை அதிகாரி, ஆனால்,  இந்த வெட்டுக்கிளிகள் தக்காண பீடபூமியை தாண்டி தமிழத்துக்கு வராது என்று தமிழக வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்து  உள்ளனர்.
இதுதொடர்பாக ஏற்கனவே செய்தியாளர்களிடம் பேசிய தரமிழக வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி,  பாலைவன வெட்டுக்கிளிகள் தமிழகம் வர வாய்ப்பு குறைவு என்றும், கிருஷ்ணகிரி, கன்னியாகுமரி பகுதிகளில் காணப்பட்டவை  உள்ளூர் வெட்டுக்கிளிகள் என்று தெரிவித்ததுடன்,  வெட்டுக்கிளி கூட்டம் தமிழகத்திற்குள் நுழைந்தால், அதை அழிக்க   3 வகையான வழிமுறைகள் திட்டமிடப்பட்டு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது  வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் திண்டுக்கல், பழனிப்பகுதிகளில் சுமார்  50ஏக்கர் சோள பயிர்கள் நாசம் அடைந்துள்ளது.  திண்டுக்கல், பழனி, ஒட்டன்சத்திரம் வட்டாரங்களில் சோளம், மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளன.  அதுபோல திண்டுக்கல் அருகே சீலப்பாடி, முள்ளிப்பாடி, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் சோளம் பயிரிடப்பட்டு உள்ளது.தற்போது பயிர்கள் ஓரளவு வளர்ந்து கதிர் பிடித்துள்ள நிலையில்,  வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு காரணமாக சோளக்கதிர்கள், வெட்டுக்கிளிகளுக்கு இரையாகி வருகின்றன. சோள பயிர்களில் தண்டு பகுதியை மட்டும் விட்டுவிட்டு, தோகை அனைத்தையும் முழுமையாக தின்று விடுகின்றன.
இந்த வெட்டுக்கிளிகள் கூட்டம் ஒரு வயலில் சோள பயிர்களின் தோகையை தின்று முடித்ததும், அடுத்த வயலுக்கு கூட்டமாக படையெடுத்து செல்கின்றன. இதனால் சோளம் பயிரிட்ட விவசாயிகள் பெரும் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
இதனிடையே வெட்டுக்கிளிகள் பரவலை தடுக்க  வேண்டிய தமிழகஅரசும், வேளாண்துறை செயலாளரும் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவும், இது தொடர்பாக மாவட்ட வேளாண்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், அவர் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்று விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.