டிலாடி, காஷ்மீர்

றைந்த ராணுவ வீரரின் தங்கைக்கு அவருடைய விமானப்படை பிரிவை சேர்ந்த 50 பேர் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரோதாஸ் மாவட்டத்தில் உள்ள படிலாடி என்னும் சிற்றூரில் தேஜ் நாராயண் சிங் என்னும் விவசாயிக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர். இவருடைய ஒரே மகனான ஜோதி பிரகாஷ் நிராலா இந்திய விமானப்படையின் கருடா பிரிவில் பணி புரிந்து வந்தார். இந்த பிரிவினர் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பந்திபோரா பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாதிகளை அழிக்க 2017 ஆம் வருடம் நவம்பர் 18 ஆம் தேதி அன்று தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் லஷ்கர் தீவிரவாத தலைவன் லக்வியின் ஒன்று விட்ட சகோதரன் ஒசாமா மற்றும் மெகமூத் பாய் ஆகிய இருவரையும் நிராலா சுட்டு வீழ்த்தினார். அப்போது அடிபட்ட தனது ராணுவ சகாக்களை காக்கும் முயற்சியில் ஈடுபட்ட போது நிராலா எதிரிகளால் கொல்லப்பட்டார். அவருடைய பிரிவு கருடா பிரிவில் இருந்த அனைத்து வீரர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியது, 2018 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று மத்திய அரசு நிராலாவுக்கு ராணுவ உயர் விருதான அசோக சக்ரா விருதை அளித்தது.

நிராலாவின் மூன்றாவது சகோதரியான சசிகலாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அந்த திருமண அழைப்பிதழ் கருடா பிரிவுக்கு அனுப்பப்பட்டது. இந்த அழைப்பிதழைக் கண்ட நிராலாவுடன் பணி புரிந்த 50 கருடா பிரிவின் வீரர்கள் திருமணத்துக்கு மூன்று நாட்கள் முன்பே வந்திருந்து திருமணத்தை முன்னின்று நடத்தி உள்ளனர். திருமண செலவுக்கு தங்கள் பங்காக ரூ.5 லட்சம் பணத்தை அளித்துள்ளனர்.

இதனால் மனம் நெகிழ்ந்த நிராலாவின் பெற்றோர், “நாங்கள் ஒரு மகனை இழந்தோம். ஆனால் 50 மகன்களை அடைந்துள்ளோம். இந்த 50 பேரும் நாங்கள் தனியாக இல்லை என்பதையும் அனைவரும் துணையாக உள்ளனர் என்பதையும் தங்கள் அன்பு மற்றும் மரியாதை மூலம் தெரிவித்துள்ளனர். இந்த நாடே எங்களுக்கு துணையாக உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் ஆசிகள்” என தெரிவித்துள்ளனர்.