50 % எம்.பி.க்களுக்கு அ.தி.மு.க.வில் டிக்கெட் இல்லை.. ‘அம்மா பாலிசி’ என்கிறது கட்சி மேலிடம்…

மெகா கூட்டணியை அமைத்து விட்டதாக ஈபிஎஸ்சும், ஓபிஎஸ்சும் மகிழ்ச்சி அடைந்து விழா , விருந்து என கொண்டாட்டத்தில் திளைத்திருக்க-

அந்த கட்சி எம்.பி.க்கள் பாதி பேர் மனப்புழுக்கத்தில் உள்ளனர். காரணம் இந்த தேர்தலில் அவர்களுக்கு ‘டிக்கெட்’ இல்லை.

கூட்டணி கட்சிகளுக்கு சீட்களை வாரி இறைத்து விட்டனர் இரு ஒருங்கிணைப்பாளர்களும். எம்.பி.தேர்தலில் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்பது அவர்கள் நோக்கம் அல்ல.

இடைத்தேர்தல் நடைபெறப்போகும் 21 எம்.எல்.ஏ. தொகுதிகளில் வென்று –ஆட்சி மற்றும் தத்தம் இடங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பது –அவர்கள் இலக்கு.

கூட்டணி கட்சிகளுக்கு அளவுக்கு அதிகமாகவே கொடுத்து விட்டதால் –இந்த முறை 50 சதவீத அ.தி.மு.க.எம்.பி.க்கள் போட்டியிட முடியாது.

உச்சபட்ச கொடுமையாக –அ.தி.மு.க.வில் உள்ள அரை டஜன் வன்னிய .எம்.பி.க்களுக்கு இந்த முறை சீட் கிடைக்கும் வாய்ப்புகள் இல்லை.

‘’அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்’’ என்று உறுதி அளித்துள்ள கட்சி மேலிடம் ‘அம்மா கடைபிடித்த ஸ்டெய்லையே இப்போதும் பின் பற்றி உள்ளோம்’ என்கிறது.

‘’கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 3 சிட்டிங் எம்.பி.க்களுக்கு மட்டுமே அம்மா வாய்ப்பு வழங்கினார்.மற்ற அனைவரும் புதுமுகங்கள் தான்’ என்று தங்கள் செயலுக்கு நியாயம் சொல்கிறது அ.தி.மு.க.தலைமை.

— பாப்பாங்குளம் பாரதி