டெல்லி: கொரோனா வைரஸ் காரணமாக, 50%  ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் இப்போது இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. திரையரங்கங்கள், கேளிக்கை விடுதிகள் மூடப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனங்கள் பலவும், அவர்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு கூறி இருக்கிறது.  இந் நிலையில் மத்திய அரசும் அதன் 50% ஊழியர்களை வீட்டிலிருந்தே பணிசெய்ய அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பான மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: குரூப் பி மற்றும் குரூப் சி பிரிவைச் சேர்ந்த ஊழியர்கள் 50% பேர் அலுவலகம் வருவதை அந்தத்துறையின் தலைவர் உறுதிப்படுத்த வேண்டும்.

மீதமுள்ள 50% பேர் வீட்டிலிருந்து பணியாற்ற வேண்டும். துறைத் தலைவர்கள் ஊழியர்களுக்கான வாரத் திட்டங்களை உருவாக்க வேண்டும். குரூப் பி மற்றும் குரூப் சி வகை ஊழியர்கள் மாற்று வாரங்களில் அலுவலகம் வர வேண்டும்.

அலுவலகத்துக்கு அருகில் வீடு உள்ளவர்கள் அலுவலகம் வருமாறு துறைத் தலைவர்கள் பார்த்து கொள்ளவேண்டும். அலுவலகத்தில் வந்து பணி செய்யும் ஊழியர்களுக்கான பணி நேரம் மாற்றியமைக்கப்படுகிறது.

வேலை நேரம் 9 மணி முதல் 5.30 வரையும், 9.30 மணி முதல் 6 மணி வரையும், 10 மணி முதல் 6.30 மணி வரையும் என 3 பிரிவுகளாக மாற்றப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து பணியாற்றுபவர்கள் தொலைபேசியில் இணைந்திருக்க வேண்டும். ஏதேனும் அவசர தேவை எனும் போது, அலுவலகம் வர தயாராக இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.