விருத்தாசலம் கொள்முதல் கூடத்தில் 50ஆயிரம் நெல் மூட்டைகள் தேக்கம்: விவசாயிகள் பரிதவிப்பு

கடலூர்,

டலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேரடி கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால், நெல் மூட்டைகளை விற்பனைக்காக கொண்டு வந்த விவசாயிகள் செய்வதறியாது பரிதவித்து வருகின்றனர்.

இதன் காரணமாக சுமார்  50ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெலமூட்டைகள்  அங்கு தேங்கி உள்ளதாக கூறப்படுகிறது.

தை பிறந்ததை முன்னிட்டு சம்பா பயிர்கள் அறுவடை நடைபெற்று வருகின்றன.இதன் காரணமாக அதிலிருந்து கிடைக்கப்பெற்ற நெல்மூட்டைகளை அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு எடுத்து சென்று விற்பனை செய்வது வழக்கம்.

இதன்படி கடலூர் மாவட்டத்தில், அறுவைடை செய்த  விவசாயிகள் நெல் மூட்டைகளை விருத்தாசலத்தில் உள்ள  ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இவ்வாறு சுமார் 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கி உள்ளது.

சூனால், விருத்தாசலம் ஒழுங்கு முறை விற்பனை கூடம், கடந்த ஒரு வாரமாக திறக்கப்படாமல் மூடியே உள்ளது. இதன் காரணமாக  விவசாயிகளின் நெல் மூட்டைகள்  எடைபோட்டு கொள்முதல் செய்யப்படாமல் திறந்தவெளியிலேயே கிடக்கிறது.

நெல் மூட்டைகள் மட்டுமின்றி அதை கொண்டுவந்துள்ள விவசாயிகளும், நெல் மூட்டைகளை பாதுகாக்கும் பொருட்டு  வெயிலிலும் பனியிலும் பரிதவிப்போடு  காத்திருக்கின்றனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த விவசாயி ஒருவர், மூடியே கிடக்கும் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தை தற்காலிக பணியாளர் நியமித்தாவது விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் அல்லது எங்களை நெல் மூட்டைகளை வெளி மாநில வியாபாரிகளுக்காவது விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.