காகிதங்கள் இல்லா தேர்வுகள் மூலம் 50 ஆயிரம் மரங்கள் பாதுகாக்கப்பட்டன – சிபிஎஸ்சி

சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் காகிதங்களின் பயன்பாடு குறைக்கப்பட்டதன் மூலம் 50ஆயிரம் மரங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளத்தாகவும், ரூ.100 கோடி சேமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

online-exams

அதிகரித்து வரும் காற்று மாசுப்பாடு, அதிகளவில் அழிக்கப்பட்டு வரும் மரங்கள் ஆகியவற்றிற்கு தீர்வு காணும் நோக்கில் சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்யப்பட்டன. மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளில் காகிதங்கள் பயன்படுத்தப்படுவது குறைக்கப்பட்டது. இதனால் 50ஆயிரம் மரங்கள் அழிவில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்சி கல்வி வாரியம் தகவல் அளித்துள்ளது. மேலும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் மூலம் தேர்வுகளை ஆன்லைனில் நடத்துவதால் ரூ.100 கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடத்திட்டங்கள், மாணவர்களின் சேர்க்கை, வருகைப்பதிவேடு மற்றும் பிற தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் காகிதங்களின் அளவை குறைத்து அனைத்தும் கணினி வழியாக சேமிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. தோராயமாக 300 கோடி பக்கங்கள் கொண்ட தரவுகள் கணினி மூலம் சேமிக்கப்படுகிறது. இது குறித்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் தலைமை செயலாளர் அனுராக் திருப்பதி கூறுகையில் “ சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு குறைந்த பட்சம் 20 பக்கங்கள் தேவைப்படும், 1.5 கோடி மாணவர்களுக்கு நடத்தப்படும் தேர்வுகளை கணக்கிட்டால் இது 300 மில்லியனை தாண்டும். இந்த அளவிற்கு காகிதங்கள் பயன்படுத்துவதை டிஜிட்டல் பயன்பாடு குறைத்துள்ளது என்று கூறினார்.

காகிதங்கள் பயன்பாடுகளை தவிர்ப்பது குறித்து சிபிஎஸ்சி பாடத்திட்டத்தின் தலைவர் அனித கர்வால் பேசுகையில் “ டிஜிட்டல் திட்டம் வெளிப்படையான செயல்திறன் மிக்கதாகம், தவறுகளை எளிமையாக திருத்தும் வகையில் உள்ளது. இதன் மூலம் நேரம் சேமிக்கப்படுகிறது. தேர்வு முடிவுகளை முன்கூட்டியே தெரிவிக்க உதவுகிறது. மேலும், கேள்வித்தாள்கள் கசிவதை தடுக்கவும் இந்த திட்டம் உதவுகிறது” என்று கூறினார்.