டில்லி:

நீண்ட தூரம் செல்லும் 500 ரெயில்களின் மொத்த பயண நேரத்தில் 2 மணி நேரம் வரை குறைக்கும் வகையில் அவற்றின் வேகத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவம்பர் மாதம் வெளியாகும் அட்டவணையில் இதற்கான அறிவிப்பு வெளியாகிறது.

இது குறித்து ரெயில்வே அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ரெயில்களை அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதனை 2 வழிகளில் நடைமுறைபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு இடத்தில் திரும்பி வருவதற்காக ஒரு ரெயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தால் அந்த இடைப்பட்ட காலத்தில் அது வேறொரு வழித்தடத்தில் இயக்கப்படும்.

புதிய ரெயில் அட்டவணையில் 50 ரெயில்கள் இது போன்று பயன்படுத்தும் அறிவிப்பு வெளியாகவுள்ளது. 51 ரெயில்களின் மொத்த பயண நேரம் உடனடியாக சுமார் ஒரு மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை குறைக்கப்படுகிறது. தொடர்ந்து 500 ரெயில்களில் இது போன்று பயண நேரம் குறைப்பு அமல்படுத்தப்படும்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘50 எக்ஸ்பிரஸ் ரெயில்களை விரைவு ரெயில்களாக மாற்ற ரெயில்வே ஆய்வு செய்து வருகிறது. சராசரி வேகத்தை அதிகரிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக தான் இந்த ஆய்வு நடந்து வருகிறது. போபால்&ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயண நேரம் 95 நிமிடங்களும், கவுகாந்தி&இந்தூர் சிறப்பு ரெயிலின் பயண நேரம் 115 நிமிடங்களும், காசிபூர்பந்தரா&எக்ஸ்பிரஸ் ரெயில் நேரம் 95 நிமிடங்களும் குறையும்’’ என்றார்.