திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5ஆயிரம் அரசு  ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இதற்காக மாநில அரசுக்கு ரூ.1600 கோடி செலவை சந்திக்க வேண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கேரள மாநிலத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வுக்கான வயது, மற்ற மாநிலங்களை விட குறைவு. வரும் 2013ம் நிதி ஆண்டு வரை பணிக்கு சேர்ந்த அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 56. மற்ற மாநிலங்களில் ஓய்வு வயது 58ஆக உள்ள நிலையில், கேரளாவில் ஓய்வு பெறும் வயது 56 ஆக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  மாற்றப்பட்டது. ஆனால், கடந்த 2014 நிதி ஆண்டு முதல் வேலைக்கு சேர்கிற அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது 60 என நிர்ணயிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று மே 31ந்தேதி முடிவடைந்துள்ள  நிலையில் மாநிலம் முழுவதும்  5 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி ஓய்வு பெற்றனர். இந்த 5 ஆயிரம் பேரின் ஓய்வு பலன்களுக்காக மாநில அரசுக்கு ரூ.1,600 கோடி செலவாகும் என கணக்கிடப்பட்டு உள்ளது.

இந்த தகவல்களை மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளம் வினியோகிக்கும் ஆன்-லைன் அமைப்பு ‘ஸ்பார்க்’ தெரிவிக்கிறது.

ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வு பலன்களை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என மாநில அரசு நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.