புதிய 500ரூபாய் நோட்டுகள் சென்னை வந்தன! திங்கள் முதல் புழக்கத்திற்கு வரும்

 

சென்னை,

புதிய 500 ரூபாய் நோட்டு கட்டுகள்  சென்னை வந்தடைந்தது. இதன் காரணமாக இன்னும் ஒரிரு நாளில் பணத்தட்டுப்பாடு நிலைமை சீராகும் என தெரிய வருகிறது.

14டன் அளவிலான புதிய 500 ரூபாய் நோட்டுகட்டுகள் ராணுவ விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பணத்தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு ராணுவ ஹெலிக்காப்டர், விமானங்கள் மூலம் பணத்தை மாநில தலைநகருக்கு டெலிவரி  செய்து வருகிறது.

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் மீதான தடை கடந்த 8ந்தேதி இரவு முதல் அமலுக்கு வந்தது. இதனால் மக்கள் தங்களிடம் உள்ள பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளின் முன் குவிந்தனர்.

ஆனால் மக்களின் தேவைக்கு ஏற்ப பணம் இல்லாமல் தட்டுப்பாடு அதிகரித்தது. புதிய 500 ரூபாய் நோட்டுகளும் புழக்கத்திற்கு இதுவரை வரவில்லை. இதன் காரணமாக சில்லரைகளுக்காவும், டெபாசிட் செய்யவும்  வங்கி மற்றும் தபால் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடந்த 15 நாட்களாக இந்த நிலை நீடித்து வந்தது.

இதைத்தொடர்ந்து பணம் அச்சடிக்கப்படும் இடமான,  நாசிக்கில் இருந்து புதிய 500 ரூபாய் நோட்டுகள் ராணுவ விமானத்தில் சென்னைக்கு வியாழக்கிழமை இரவு கொண்டு வரப்பட்டன.

மொத்தம் 14 டன் நோட்டுகள் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புதிய நோட்டுகள் தமிழ்நாடு முழுவதும் உள்ள வங்கி கிளைகளுக்கு பிரித்து அனுப்பப்படும். வரும்  திங்கள்கிழமை முதல் வங்கி, ஏ.டி.எம். மையங்கள் மூலம் விநியோகிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ஒருசில மாநிலங்களில் புதிய 500 ரூபாய் நோட்டு புழக்கத்திற்கு வந்துள்ளது. தமிழ்நாட்டில் சேலம் மாவட்டத்தில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் கரூர் வைஸ்யா வங்கியில் வினியோகிக்கப்பட்டன.

சென்னையில் வியாழக்கிழமை மட்டும் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம். மையங்களில் மட்டும் புதிய 500 ரூபாய் பொதுமக்களுக்கு கிடைத்தன. ஆனால், இதர வங்கிகளிலோ, பிற ஏ.டி.எம். மையங்களிலோ புதிய 500 ரூபாய் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் அச்சடிக்கப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் விமானப்படை விமானம் மூலம் வியாழக்கிழமை நள்ளிரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்தது.

பின்னர் அவை 2 கன்டெய்னர்களில் ஏற்றப்பட்டு பலத்த பாதுகாப்புடன் சென்னை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்தால் நாட்டில் நிலவி வரும் பணப்பிரச்சினை ஓரளவுக்கு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.