கர்நாடக எம்.எல்.ஏ மருமகனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.51 லட்சம் பரிசு! முஸ்லிம் நபர் பகிரங்க மிரட்டல் (வீடியோ)

--

மீரட்: கர்நாடக எம்.எல்.ஏ மருமகனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.51 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த  முஸ்லிம் நபர் ஒருவர் பகிரங்க மிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ் எம்.எல்.ஏ அகந்தா சீனிவாஸ் மூர்த்தியின் மருமகன் நவீன் என்பவர் இஸ்லாம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் முகநூலில் பதிவிட்டதாக கூறி, இஸ்லாமியர்கள் அங்கு வன்முறையில் ஈடுபட்டனர். இதில்,  காங்கிரஸ் எம்.எல்.ஏ வீடு உள்பட, காவல் நிலையம் தாக்கப்பட்ட நிலையில், ஏராளமான வாகனங்களும் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்டன.

வன்முறையை அடக்க காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் , வன்முறையில் ஈடுபட்ட  3 இளைஞர்கள் உயிரிழந்தனர். 6 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இந்த வன்முறை தொடர்பாக  காங்கிரஸ் எம்.எல்.ஏவின் உறவினர்கள் உட்பட 206 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்நாடக எம்.எல்.ஏ மருமகனின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.51 லட்சம் வழங்கப்படும் என்று மீரட்டில் ஒரு நபர் அறிவித்து வீடியோ வெளியிட்டுள்ளது  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கர்நாடக காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது. அதில், மிரட்டல் வீடியோ வெளியிட்ட நபர்,  உத்தரபிரதேசத்தில் மீரட் மாவட்டத்தில் உள்ள ஃபலாவாடா நகரில் வசிக்கும் ஷாஜெப் ரிஸ்வி என கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.

அந்த நபர் பேசிய வீடியோவை கைப்பற்றி, ஐபிசி 153ஏ, 505(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தற்போது அந்த நபர் தலைமறைவாக இருப்பதால் அவரை தேடி வருகிறோம் விரைவில் கைது செய்வோம் என தெரிவித்துள்ளனர்.