ஏப்ரலில் புதிதாக தேர்வாகும் ஐம்பத்தொரு எம்பிக்கள்.. கதிகலங்கி நிற்கும் பாஜக

சிறப்பு கட்டுரை: ஏழுமலை வெங்கடேசன்

ராஜ்யசபா என்று அழைக்கப்படும் நாடாளுமன்ற மேல்சபையில் மொத்தம் 245 எம்.பி.க்கள் உள்ளனர்.

தேர்தலில் போட்டியிடாத பிரதமர் மற்றும் தேர்தலில் தோற்றுப்போன அமைச்சர்களை எம்.பி.க்களாக அனுப்பி வைக்க பிரதானமாக பயன் படுகிறது ,இந்த சபை.

பிரதமருக்கு உதாரணம் கூற வேண்டும் என்றால் மன்மோகன் சிங். அமைச்சர்களுக்கு – அருண் ஜெட்லி உள்ளிட்டோர் உதாரணம்.

பெரும்பாலான எம்.பி.க்கள் மாநில சட்டசபைகளில் இருந்து தேர்வு செய்யப்படுகிறார்கள். பிரதமர் கோட்டாவில் இருந்து நட்சத்திரங்கள்,கல்வியாளர்கள், விளையாட்டு வீரர்கள் நியமிக்கப்படுவதுண்டு.

வரும் ஏப்ரல் மாதம் 51 எம்.பி.க்கள் பதவி காலியாகிறது. ராஜ்யசபா துணை தலைவர் ஹரிவஞ்ச், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதால்வே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா,திக் விஜய் சிங் ஆகியோர் ஓய்வு பெறும் வி.வி.ஐ.க்கள்.

மக்களவையில் அசுர பலத்துடன் உள்ள பா.ஜ.க.வுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை. பா.ஜ.க.வுக்கு மொத்தம் 82 எம்.பி.க்கள் தான் உள்ளனர்.

எனினும் கூட்டணி கட்சியான அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வை அவ்வப்போது அனுசரித்துப்போகும் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ், பிஜு ஜனதா தளம் போன்ற கட்சிகள் ஆதரவோடு சில தீர்மானங்களை ராஜ்யசபாவில் நிறைவேற்றி விடுகிறது-பா.ஜ.க.
பா.ஜ.க.வை சேர்ந்த 18 பேர் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த கட்சியின் சார்பில் மீண்டும் 13 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பு உள்ளது.

காங்கிரசுக்கு ராஜ்யசபாவில் 46 எம்.பி.க்கள் உள்ளனர்.அவர்களில் 11 பேர் ஓய்வு பெறுகிறார்கள். அந்த கட்சி 10 பேரை மீண்டும் தேர்வு செய்ய முடியும்.

ஓய்வு பெறும் எம்.பி.க்களில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 6 பேர். தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலத்தை வைத்து பார்த்தால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.தலா 3 எம்.பி.க்களை பெற முடியும்.

ஆந்திராவில் 4 இடங்கள் காலியாகிறது. 4 இடமும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கே கிடைக்கும்.

மே.வங்க மாநிலத்தில் 5 இடங்கள் காலியாகும். 4 இடங்களை ஆளும் கட்சியான திரினாமூல் காங்கிரஸ் கைப்பற்றும்.
எஞ்சிய ஒரு இடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் எச்சூரியை காங்கிரஸ் ஆதரவோடு தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடக்கின்றன.

பீகாரில் 5 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிகிறது. ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க.கூட்டணிக்கு 3 இடங்களும், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கு 2 இடங்களும் கிடைக்கும்.

முன்னாள் முதல்வர் ராப்ரி தேவியை ஒரு இடத்தில் நிற்க வைத்து டெல்லிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார் ,அவரது கணவர் லாலு பிரசாத் யாதவ்.

மத்தியில் இரண்டாவது முறையாக மோடி அரசு அமைந்தாலும் மாநிலங்களைப் பொறுத்தவரை சட்டமன்ற தேர்தல்களில் அது தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து வருகிறது.

இதன் காரணமாக மாநில சட்டசபை உறுப்பினர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ராஜ்யசபா எம்பிக்களின் எண்ணிக்கை பாஜகவை பொருத்தவரை மேலும் குறைய வாய்ப்புள்ளது.. ஏற்கனவே மசோதாக்களை ராஜ்யசபாவில் நிறைவேற்றுவதாக படாத பாடுபடும் பாஜக இன்னும் கடுமையான நெருக்கடிகளை ஏப்ரலுக்கு மேல் சந்திக்கக்கூடும் என்று தெரிகிறது.

கார்ட்டூன் கேலரி