14 சிலிப்பர் பேருந்துடன் 515 புதிய அரசு பேருந்துகள்: முதல்வர் எடப்பாடி தொடங்கி வைத்தார்
சென்னை:
தமிழக அரசுக்கு சொந்தமான புதிய வண்ணத்திலான 515 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார்.
300 கோடி ரூபாயில் தமிழகத்திற்கு புதிய பேருந்துகள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஏற்கனவே தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருந்த நிலையில், முதல்கட்டமாக இன்று 14 படுக்கை வசதிகள் கொண்ட பேருந்துடன் 515 புதிய பேருந்துகள் இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.134 கோடி செலவில் 515 புதிய பேருந்துகள் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடி அசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் எம்.ஆர் விஜயபாஸ்கர், திண்டுகல் சீனிவாசன், செல்லூர் ராஜு, செங்கோட்டையன் என பல அமைச்சர்களும் கலந்துகொண்டனர்.
இதுவரை அரசு பேருந்துகள் பச்சை, சிகப்பு என்ற வண்ணங்களில் ஓடிய நிலையில், இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள பேருந்துகள் நீல வண்ணத்தில், பார்ப்போரை கவரும் வகையில் உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் இன்று போக்குவரத்து துறை குறித்த விவாதங்கள் நடைபெற உள்ள நிலையில், இன்று புதிய பேருந்துகளை முதல்வர் தொடங்கிய வைத்திருக்கிறார்.
இன்றைய புதிய 515 பேருந்துகளில், 14 பேருந்துகள் படுக்கை வசதிகள் கொண்டது. தமிழகத்தில் அரசு பேருந்துகளில் முதல் முறையாக படுக்கை வசதி செய்யப்பட்ட பேருந்துகள் சேவை தொடங்கப்பட்டு உளளது.