தினமும் 52 புகார்கள்..! வளைகுடா நாடுகளில் வஞ்சிக்கப்படும் இந்திய தொழிலாளர்கள்..! அதிர்ச்சி தரும் புள்ளிவிவரம்!!

குவைத்: போதிய ஊதியம் தராதது, தொழிலாளர்நல உரிமைகள் நசுக்கப்படுவது என வளைகுடா நாடுகளில் தினசரி 52 புகார்கள் வெளிநாடு வாழ் இந்திய தொழிலாளர்களிடம் இருந்து வருகின்றன.

மற்ற நாட்டு தொழிலாளர்களை காட்டிலும், வளைகுடா நாடுகளில் இந்திய தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, குவைத், கத்தார் ஆகிய 6 அரபு நாடுகளில் இந்திய தொழிலாளர்கள் அதிகம் பேர் பணியாற்றி வருகின்றனர்.

இந் நிலையில் நாடாளுமன்றத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் தொடர்பாக பேசிய அமைச்சர் முரளிதரன், அரபு நாடுகளின் இந்திய தூதரகங்களில் கடந்த ஜனவரி முதல்  அக்டோபர் 12 வரை 15,051புகார்கள் இந்திய தொழிலாளர்களிடம் இருந்து வந்திருக்கின்றன என்று கூறியிருக்கிறார்.

அவையில் அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது: அரபுநாடுகளில் பணி அமர்த்தப்படும் இந்திய தொழிலாளர்களிடம் இருந்து தான் ஏராளமான புகார்கள் பதிவாகி இருக்கின்றன.

அதில் அதிக புகார்கள் போதிய ஊதியம் தருவதில்லை என்பதுதான். அதுதவிர, குடியிருப்பு அனுமதியை புதுப்பித்து தர மறுப்பது, தொழிலாளர் நல உரிமையை நசுக்குவது, அதிக நேரம் வேலை வாங்குவது ஆகிய புகார்களும் பதிவாகி இருக்கின்றன.

மேலும், இந்தியா சென்று மீண்டும் பணியிடம் வர அனுமதி மறுப்பது, மருத்துவ மற்றும் காப்பீடு வசதி செய்து தராதது ஆகிய பொருள்களிலும் புகார்கள் வரப்பெற்றுள்ளன என்று தெரிவித்துள்ளார்.

வெளிநாடு வாழ் இந்தியர்களின் நிலையானது கடந்த ஆண்டுகளை சமீபகாலமாக மிகவும் மோசமாகி வருகிறது. குறிப்பாக அரபு நாடுகள் வேலைவாய்ப்பு தொடர்பான கண்டினஷன்களை அதிகரித்து வருகின்றன.

gulf

கபாலா என்று ஒப்பந்தத்தை தொழிலாளர்களிடம் பயன்படுத்துகிறது. அதேநேரத்தில் இது தொடர்பாக அரசாங்க தரப்பில் இருந்தும் போதிய, வலுவான ஒப்பந்த நெறிமுறைகள் இல்லை. அதுவே இந்திய தொழிலாளர்களுக்கு பாதகமாக முடிந்துவிடுகிறது.

அரபு நாடுகளில் குறிப்பாக சவூதி அரேபியாவில் தான் உச்சபட்சமாக,  இந்திய தூதரகத்தில் 4286 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. அதற்கு அடுத்து குவைத்தில் 3496 வழக்குகள், ஐக்கிய அரபு அமீரகத்தில் 2493 வழக்குகள், ஓமனில் 2308 வழக்குகள் பதிவாகி உள்ளன. இவை அனைத்தும் புள்ளிவிவரங்களின் படி ஆதாரப்பூர்வமான எண்ணிக்கையாகும்.

கத்தாரில் 1883 வழக்குகள் பதிவாகி உள்ளன. அரபு நாடுகளில் குறைவாக பஹ்ரைனில் மட்டும் தான் 535 வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. புகார்கள் ஒருபுறம் இருக்க, இந்திய தொழிலாளர்கள் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது.

கடந்த அக்டோபர் வரை, சவூதியில் 1920 இந்திய தொழிலாளர்கள் மரணமடைந்து இருக்கின்றனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் 1451, குவைத்தில் 584, ஓமனில் 402 பேர் உயிரை இழந்திருக்கின்றனர். பஹ்ரைனில் 180 பேர் தான் மரணம் அடைந்துள்ளனர்.

வெளிநாடுகளில் இந்தியர்களின் மீதான கொடுமைகள்,  மரணங்கள் அதிகளவு நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதற்கு காரணம், மற்ற நாடுகளுடன் சரியான அளவில் சர்வதேச ஒப்பந்தங்கள் இல்லாததே காரணம் என்று சுட்டிக்காட்டப்படுகிறது. புள்ளிவிவரப்படி வளைகுடா நாடுகளில் 3 கோடி இந்திய தொழிலாளர்கள் பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You may have missed