பேனர் கிழிப்பு விவகாரத்தில் அமமுகவினர் கைது: சட்ட ரீதியாக சந்திப்பதாக டிடிவி சவால்

சென்னை:

தேவர் குருபூஜை அன்று, கமுதி பகுதியில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களை டிடிவி ஆதரவாளர்கள் கிழித்தது தொடர்பாக டிடிவி ஆதரவாளர்கள் 52 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொண்டு பதில் நடவடிக்கை எடுப்பேன் டிடிவி தினகரன் கூறி உள்ளார். மேலும், அதிமுக தலைகீழாக தாண்டி குதித்தாலும் 20 தொகுதிகளிலும்  டெபாசிட் வாங்க முடியாது என்றும் சவால் விடுத்துள்ளார்.

தேவர் ஜெயந்தி அன்று பசும்பொன்னில் அதிமுக பேனர்கள் கிழித்தது தொடர்பாக டிடிவி தினகரன் உள்பட 100 பேர் மீது கமுதி போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளது. பேனர் கிழிப்பு தொடர்பாக அமமுக கமுதி வடக்கு ஒன்றிய துணை செயலாளர் மாரிமுத்து உள்பட பலர் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து டிடிவியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்த தினகரன், பேனர் கிழிப்பு விவகாரத்தை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றார். மேலும், இப்போது இருக்கும் நிலையில் அதிமுக 20 தொகுதிகளிலும் டெபாசிட்கூட வாங்காது. அதனால், இப்படியெல்லாம் அரசியல் செய்கிறார்கள்” என்றவர் அவர்கள் தலைகீழாக தாண்டி குதித்தாலும் டெபாசிட் வாங்க முடியாது என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் மதுரையில் ஒரே ஓட்டலில் ஸ்டாலின் மற்றும் தாங்கள் தங்கி யிருந்தபோது ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு, “நான் மதுரை சென்றால் எப்போதுமே அந்த தனியார் ஓட்டலில்தான் தங்குகிறேன். நான் தங்கியிருந்த அதே நாளில் ஜி.கே.வாசனும்கூட அந்த ஓட்டலில்தான் தங்கியிருந்தார். ஸ்டாலின் அங்கு தங்கியிருப்பது எனக்கு இரவுக்கு மேல்தான் தெரிந்தது. ஒரே ஓட்டலில் தங்கியிருந்ததால் ரகசிய சந்திப்பு என்று கூறுவதெல்லாம் நியாயமா? என்று எதிர்கேள்வி எழுப்பினார்.

இதுவெல்லாம் விவாதமாக என்றவர்,   ரஃபேல் போர் விமான சர்ச்சை குறித்து விவாதித்திருந்தால் நான் வரவேற்றிருப்பேன் என்றவர்,  அண்மையில் திருவண்ணாமலையில் ஒரு ஓட்டலில் தங்கியிருந்தேன். அன்று வேறு ஒரு நிகழ்ச்சிக்காக வந்த தமிழக பாஜக தலைவரும் அதே ஓட்டலில் தங்கினார். அதனால், அன்று நாங்கள் ரகசிய சந்திப்பு நடத்தினோம் என்பீர்களா? என்றார்.