கோவை:  2 வீடுகளில் 53 சவரன் நகை திருட்டு!

 

கோவையில் இரண்டு வீடுகளின் பூட்டை உடைத்து 53 பவுன் நகைகள் 3 கிலோ வெள்ளி மற்றும் 80,000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம்   சூலூர் விமானப்படைத் தளத்தின் பின்புறம் உள்ள காடம்பாடி பிருஷ்ணா கார்டன் பகுதியை சேர்ந்தவர் செந்தில் ஆனந்த். வயது 45. இவர் இதே பகுதியில்  உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் பணிபுரிகிறார். இவர் தனது மனைவி சிலம்புச்செல்வி மற்றும் மகனுடன் சனிக்கிழமையன்று தனது சொந்த ஊரான பழனிக்கு சென்றிருந்தார். நேற்று காலை ஊரிலிருந்து நேராக வங்கிக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பினார். அப்போது அவரது வீட்டின் கதவு முன்பக்கமாக உடைந்து திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டினுள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 30 பவுன் நகைகள் மற்றும் 3 கிலோ வெள்ளிப் பொருட்கள் ரூ.80,000 பணம் ஆகியவை கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

அதேபோல சூலூர் காவல்நிலையத்தின் பின்புறம் இன்னொரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. பி.கே.டி.நகரில் வசித்து வருபவர் வெங்கட்ராமன், தனியார் நர்சிங் கல்லூரி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவியுடன் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது இவரது வீடும் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 23 பவுன் நகைகளைத் திருடப்பட்டிருந்தது.

இந்த இரட்டை கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்று வருகிறது.

ஒரே நாளில் இரண்டு வீடுகளின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை நடந்த சம்பவம் சூலூர் பகுதி மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.