கொச்சியில் பிராமணர்கள் அல்லாத 54 பேர் அர்ச்சகர்களாக நியமனம்

வரலாற்றிலேயே முதல் முறையாக, பிராமணர்கள் அல்லாத 54 பேர் அர்ச்சகர்களாகக் கொச்சிதேவஸ்தானம் நியமித்துள்ளது. இதில் 7 பேர் எஸ்.சி வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

brahmins

கொச்சி தேவஸ்தானத்தில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட 54 பேரும் கேரளா அரசுத் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்ட தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் தேர்ச்சி பெற்றதன் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளனர். புகழ்பெற்ற தந்திரிகள், தந்திரி மண்டலம், தந்திரிகள் சமாஜம் ஆகியோர் இந்த நேர்முகத் தேர்வை நடத்தி அர்ச்சகர்களைத் தேர்வு செய்தனர்.

இதுகுறித்து தேவஸம்போர்டு அமைச்சர் கடக்கம்பள்ளி சுரேந்திரன் திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ பிராமணர்கள் அல்லாத 54 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதில் எந்த முறைகேட்டுக்கும் வழியில்லை. முறைப்படியான ஓ.எம்.ஆர். முறை தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்பட்டு தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், தகுதியின் அடிப்படையிலும், இட ஒதுக்கீட்டின் முறையிலும் மொத்தம் 70 பேர் “சன்னதி” களாத் பரிந்துரை செய்யப்பட்டனர். இதில் மெரிட் லிஸ்டில் 31 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 16 பேர் பிராமணர்கள். 54 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டதில் 34 பேர் ஈழவா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2 பேர் தேவராசமூகத்தையும், இருவர் விஸ்வகர்மா சமூகத்தையும், ஒருவர் இந்து நாடார் சமூகத்தையும் சேர்ந்தவர் எனத்தெரிவித்தார்.

இதற்கு முன் திருவிதாங்கூர் தேவஸ்தானம் வாரியத்தின் சார்பில் பிராமணர்கள் அல்லாதோர் 36 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் 6 பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கொச்சி தேவஸ்தானம் சார்பில் பிராமணர் அல்லாதோர் அர்ச்சகர்களாக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.