ஐதராபாத்: ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில், கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் புகைப்பட அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பு செயல்பாட்டினால், சுமார் 55 லட்சம் வாக்காளர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கப்பட்ட கேள்விகளின் அடிப்படையில், இந்த விபரங்கள் கிடைத்துள்ளன.

முறையாக ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று ஆராயாமல், அவசரப்பட்டு 55 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் என்பது அந்த விபரங்களின் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

எனவே, தேர்தல் கமிஷன் இதுதொடர்பான ஒரு விரிவான விசாரணையை மேற்கொண்டு, வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டவர்களின் விபரங்களை முழுமையாக வெளியிட வேண்டுமென தேர்தல் கமிஷனை வலியுறுத்தியுள்ளனர் இதற்காகப் போராடும் ஸ்வேச்சா என்ற அமைப்பினர்.

மேலும், தேர்தல் புகைப்பட அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பு தொடர்பாக, தெலுங்கானாவில் நிகழ்ந்த அனைத்துவித செயல்பாடுகளின் விபரங்களும் வெளியிடப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி