கான்பூரில் சர்ச்சைக்குரிய அரசு பெண்கள் விடுதியில் 57 பேருக்கு கொரோனா

கான்பூர்

ரசு நடத்திவரும் ஒரு பெண்கள் விடுதியில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கொரோனா பாதிப்பில் அகில் இந்திய அளவில் ஐந்தாம் இடத்தில் உள்ளது.  இங்கு சுமார் 14900க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அதில் 550 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதுவரை 10,995 பேர் குணம் அடைந்து தற்போது 6186 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இங்கு சராசரியாகத் தினசரி சுமார் 500க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது.

இம்மாநிலத்தில் உள்ள கான்பூர் நகரில் உள்ள ஒரு ஆதரவற்ற பெண்கள் விடுதியில் 5 பெண்கள் கருவுற்றுள்ளதாக ஞாயிற்றுக் கிழமை அன்று ஊடகங்களில் செய்திகள் வெளி வந்தன.   இதையொட்டி நாடெங்கும் பரபரப்பு ஏற்பட்டது.  மேலும் இந்த விடுதியில் உள்ள பெண்கள் பாதுகாப்பு குறித்தும் பல கேள்விகள் எழுந்தன.

இந்நிலையில் நேற்று இரவு கான்பூர் மாவட்ட நீதிபதி, ”இந்த 5 பெண்களும் வேறு வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.  இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு காப்பாற்றப்பட்டு இந்த விடுதிக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.  கடந்த டிசம்பர் மாதம் இந்த விடுதியில் சேர்க்கப்பட்ட ஐவரும் இங்குச் சேரும்போதே கருவுற்று இருந்தனர்.” எனத் தெரிவித்துள்ளார்.

தற்போது அதே விடுதியில் 57 பெண்களுக்கு கொரோனா பாதிப்பு உள்ளதாகச் செய்திகள் வந்து மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  பாதிப்படைந்த பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.  மற்ற பெண்களுக்கும் ஊழியர்களுக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றாலும் 14 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டு அந்த விடுதி முழுவதுமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.