” 570 கோடி” கண்டெய்னர்களின்  பதிவு எண்கள் போலி: தொடரும் மர்மங்கள்

13254315_10153844656633303_6245414985303017587_n

 

திருப்பூரில், 570 கோடி ரூபாயுடன் பிடிபட்ட மூன்று கன்டெய்னர் லாரிகளில், ஒன்றின் பதிவு எண் போலி என்றும், அது, ‘இன்னோவா காருக்குரியது’ என்றும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது. .

கோவையில் இருந்து ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்துக்கு, 570 கோடி ரூபாயை எடுத்துச் சென்ற மூன்று, ‘கன்டெய்னர்’ லாரிகளை, திருப்பூர் அருகே செங்கப்பள்ளி என்ற இடத்தில் தேர்தல் கண்காணிப்பு அதிகாரிகள், கடந்த 14ம் தேதி பறிமுதல் செய்தனர்.

பிடிபட்ட மூன்று லாரிகளில் ஒன்றின் பதிவெண், AP 13 X 5204 என, நம்பர் பிளேட்டில் உள்ளது. ஆனால், இந்த நம்பர், உண்மையில் இந்த கன்டெய்னர் லாரிக்குச் சொந்தமானதல்ல என்றும், ஆந்திரா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஜாபர் அகமதுகான் என்பவருக்குச் சொந்தமான, ‘இன்னோவா’ காரின் எண் சொந்தமானது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், AP 13 X 8650 என்ற கன்டெய்னர் லாரியின் உரிமையாளர் பெயர் காஜா முகமது என்றும், AP 13 X 5203 என்ற கன்டெய்னர் லாரியின் உரிமையாளர் சலீம் முகமது என்றும் ஆவணத்தில் உள்ளது.  ஆனாலும் இதுவும் சரிதானா என்பதை விசாரிக்க வேண்டியிருக்கிறது.

மூன்று லாரிகளின் உரிமையாளர்கள் என வேறு வேறு பெயர்களை ஆவணங்கள் சொல்கின்றன.  ஆனால் போக்குவரத்துத்துறை ஆவணத்தில் காஜா முகமது,  சலீம் முகமது இருவரின் புகைப்படங்களும் ஒரே நபருடையதுதான்.

ரூ570 கோடி பணத்தை எடுத்துச் செல்ல, போலி பதிவு எண் கொண்ட கன்டெய்னர் லாரிகளை , வங்கி அதிகாரிகள் தெரிந்தே ஒப்பந்தம் செய்தார்களா  அவற்றின் ஆர்.சி., புத்தகம், இன்சூரன்ஸ் ஆவணங்களை பரிசோதிக்கவில்லையா, என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

இவற்றை  திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயந்தி ஐ.ஏ.எஸ் ஏன் சரிபார்க்கவில்லை. மூன்று கண்டெயனருடன் சென்ற வங்கி ஊழியர் சூரிரெட்டி மீது பல குற்றச்சாட்டுகள் உள்ளன.. சூரி ரெட்டி செயல்பாடுகள் முழுமையாக விசாரணை செய்யப்பட்டால், பல உண்மைகள் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

ஆக, பண கண்டெய்னர் பற்றிய மர்மங்கள் அதிகரித்துக்கொண்டே போகின்றன என்பதுதான் உண்மை.

(மக்கள் செய்தி மையம்  இணைய இதழில் இருந்து..)