a
திருப்பூர்: திருப்பூர் அருகில்   மூன்று கண்டெய்னர் லாரிகளில் எடுத்துச்செல்லப்பட்ட கட்டுக்கட்டான பணம் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன.  இந்தத் தொகை 570 கோடி ரூபாய்  என தகவல் வெளியானது. ஆனால் ஆவணங்களின் அடிப்படையில் 195 கோடி ரூபாய் இருப்பதாக தெரியவந்துள்ளது  என்று தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி கூறியுள்ளார்.
கோவையில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில்  நேற்று இரவு ஒரு மணியளவில் மூன்று  கண்டெய்னர் லாரிகளும், அதற்கு முன்னும் பின்னும் மூன்று இன்னோவா கார்களும் என மொத்தம் ஆறு வாகனங்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இந்த வாகனங்களை   தேர்தல் அதிகாரி விஜயபாஸ்கர் தலைமையிலான அதிகாரிகள், சோதனையிட்டனர். அதில்  பணம் இருப்பதாக கண்டெய்னரில் வந்தவர்கள் கூறினர்.
அந்த பணம் கோவை பாரத ஸ்டேட் வங்கியில் இருந்து விசாகப்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
கண்டெய்னர் வாகனத்திலும், இன்னோவா காரிலும் தலா ஒர ஆந்திர மாநில போலீசாரும் இருந்துள்ளனர். ஆனால்  அவர்கள் சீருடை  அணிந்திருக்கவில்லை. ஆந்திரா மாநில எல்லைக்கு சென்ற பின் யூனிபார்ம் அணிந்து கொள்ளலாம் என இருந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த தேர்தல் அதிகாரிகள், மூன்று கண்டெய்னர் லாரிகளையும் பறிமுதல் செய்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றார்கள்.
இந்த கண்டெய்னர் லாரிகளில் மொத்தம் 570 கோடி ரூபாய் இருப்பதாக செய்தி வெளியானது. ஆனால், ஆவணங்களின் அடிப்படையில், 195 கோடி ரூபாய் இருப்பதாக தற்போத தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கண்டெய்னர் லாரிகளுடன் வந்த ஆந்திர போலீசார்  “விசாகப்பட்டினம் வங்கிக்கு கொண்டு செல்லும் பணத்தை தான் அதிகாரிகள் பிடித்துள்ளனர். உரிய ஆவணங்கள் இருந்தும் பிடித்துவைத்துள்ளனர். , வங்கி அதிகாரிகள் வந்து இதனை உறுதிப்படுத்திய பின் தான் விடுவோம் என்கிறார்கள்” என்று தெரிவித்தனர்.
தமிழக தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி, ”அந்த மூன்று கண்டெய்னர் லாரிகளில் 570 கோடி ரூபாய் இருப்பதாக வெளியான தகவல் உறுதி செய்யப்படவில்லை. கண்டெய்னர்கள் திறந்து சோதிக்கப்படவில்லை. அவர்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில், அந்த கண்டெய்னர்களில் 195 கோடி ரூபாய் இருப்பதாக தெரிகிறது.   இது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். விசாரணைக்கு பின்னர் ஆவணங்கள் இருந்தால் பணம் விடுவிக்கப்படும்” என்று லக்கானி கூறினார்.