சென்னை:

மிழகத்தில்  உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்படைந்துள்ள நிலையில்,  சென்னையில் 5,720 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு வருவதாக  சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்பட்டது.  அவர்களின் பதவிக்காலம் 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் முடிவடைந்தது. அதையடுத்து, தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், வழக்கு காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில்,  3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடங்கி உள்ளது.

கடந்த 3 ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாததால், தமிழகத்திற்கு வரவேண்டிய  மத்திய அரசின் நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு வராமல் கடுமையான நிதிநெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த நிலையில்,  நடப்பாண்டு ஆகஸ்ட் இறுதியில் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த இருப்பதாக, மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்தது.

இதனையடுத்து தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது. வார்டுகள் வரையறை  செய்யப்பட்டு, அதில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு அடிப்பைடயில் பட்டியலும் தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரான பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சென்னையில் உள்ள 200 வார்டுகளுக்கும் மொத்தம், 5,720 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஆண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடி களும், பெண் வாக்காளர்களுக்காக 78 வாக்குச்சாவடிகளும் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்காளர்களுக்காகவும்  5,564 வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வரும் திங்கட்கிழமையன்று பொதுமக்கள் பார்வைக்கு  வைக்கப்படும் என்றும்,  வரைவு வாக்குச்சாவடி பட்டியலை மாநகராட்சி ஆணையர் அலுவலகம், மண்டல அலுவலகங்கள், அனைத்து வார்டு அலுவலகங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வையிடலாம்.

இவ்வாறு  சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்து உள்ளார்.