சென்னை:
கொரோனா பொதுமுடக்கம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்டு வர  58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்தியஅரசு தெரிவித்து உள்ளது.

பொதுமுடக்கம் காரணமாக பல்வேறு நாடுகள் விமானசேவைகளை ரத்து செய்துள்ள நிலையில்,  வெளிநாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்டு வர இந்திய அரசு வந்தே பாரத் மிஷன் என்ற பெயரில் சிறப்பு விமானங்களை இயக்கி இந்தியார்களை அழைத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டதால், வெளிநாட்டில் சிக்கிய தமிழர்கள் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கின் கடந்த விசாரணையின்போது, தமிழகஅரசு, விமான சேவைக்கு அனுமதி வழங்குவதாக தெரிவித்தது. இதையடுத்து, வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வருவது குறித்து மத்தியஅரசு பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது.  வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை அழைத்து வர 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வருகிற 20ம் தேதி முதல் ஆகஸ்ட் 5ம் தேதி வரை தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதகவும், அதன்படி, சென்னை விமான நிலையத்திற்கு 41, திருச்சி-11, கோவை – 4, மதுரை – 2 விமானங்கள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் அனைவரும் மீட்கப்படுவார்கள் என்று தெரிவித்து உள்ளது.