59வயதில் டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சார்லி! திரையுலகினர் வாழ்த்து

சென்னை:

ஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி ‘முனைவர்’ பட்டம் பெற்றார். அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். நேற்று நடைபெற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்  ஆளுநர் பன்வாரிலால் புரோகித், நடிகர் சார்லிக்கு ‘முனைவர்’ (டாக்டர்) பட்டம் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் நடிகர் சார்லி. தமிழ் திரையுலகில் காமெடியன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து புகழ் பெற்றவர். 1960ம் ஆண்டு மார்ச் மாதம் 6-ம் தேதி பிறந்த நடிகர் சார்லிக்கு தற்போது 59 வயதாகிறது.  நடிகர் சார்லியின் இயற் பெயர் மனோகர். பிரபல ஆங்கில நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் நினைவாக திரைப்படத்திற்காக தனது பெயரை ‘சார்லி’ என மாற்றிக் கொண்டார்.

தமிழ் இலக்கியத்கில் எம். ஏ. பட்டதாரியான சார்பில், ‘இயக்குநர் சிகரம்’ கே. பாலச்சந்தர் இயக்கிய ‘பொய்க்கால் குதிரை’ திரைப்படம் மூலம் 1983-ம் ஆண்டு நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். இதுவரை 800க்கு மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

பொதுவாக திரையுலகைச் சேர்ந்தவர்கள் சினிமாவில் வாய்ப்பு குறையத்தொடங்கியதும் அரசியலுக்குள் புகுவது வழக்கம். ஆனால், சார்லி, தனது ஓய்வு நேரத்தை ஆய்வில் கவனம் செலுத்தினார். தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை என்ற பெயரில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தார். அவரது ஆய்வு அறிக்கையின்படி தற்போது இவருக்கு தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டத்தை அளித்துள்ளது

நேற்று  நடைபெற்ற தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு முனைவர் பட்டத்தை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன், பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் கோ. பாலசுப்பிரமணியன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகர் சார்லி, ஏற்கனவே கடந்த 2013 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட வளர்ச்சிக்கு நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு என்ற தலைப்பில் ஆய்வு செய்து அழகப்பா பல்கலைகழகத்தில் சார்லி எம்.பில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி