5ஜி தொலைபேசி சேவையை 2020-ம் ஆண்டில் தொடங்க நடவடிக்கை: பரீட்சார்த்த குழு தலைவர் அபய் கரன்டிகர் தகவல்

புதுடெல்லி:

5 ஜி தொழில்நுட்ப சேவையை 2020-ம் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் தொடங்க ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருவதாக ஸ்பெக்ட்ரம் பரீசார்த்த குழு தலைவர் அபய் கரன்டிகர் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, 5 ஜீ சேவையை குறைந்தபட்ச கட்டணத்தில் வழங்கி, பரீட்சார்த்த சேவையை செயல்படுத்துவதே தற்போதைய சவாலாக உள்ளது.

தொலைத் தொடர்புத் துறையினால் வழங்கப்படும் பரீட்சார்த்த உரிமத்தில், தொலை தொடர்பு சேவை தரும் நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விதிகளை மாற்றியமைக்க வேண்டும்.

கடந்த பிப்ரவரி 25-ம் தேதி எனது தலைமையில் குழு  அமைக்கப்பட்டுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்துக்கான உரிமம், அளவு, கட்டணம் மற்றும் பரீட்சார்த்த சேவை வழங்குவது தொடர்பான பரிந்துரைகளை அரசுக்கு வழங்குவோம்.

2018 தொடக்கத்திலேயே சிஸ்கோ, சாம்சங், எரிக்ஷன் மற்றும் நோக்கியா நிறுவனங்களுடன், 5ஜி தொழில்நுட்ப சேவையை வழங்குவது தொடர்பாக தொடர்பில் இருக்குமாறு, வோடாபோன், பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனங்களை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

2019-க்கும் முன்பாக 5ஜி தொழில்நுட்பத்துக்கு ஏற்ப தொலைபேசி சாதனத்தை மேம்படுத்த கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 5 ஜி தொழில்நுட்ப பரீட்சார்த்த சேவை இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் என்றார்.