Random image

திருப்பதி பிரமோற்சவம் 5வது நாள்: மோகினி அவதாரத்தில் மலையப்ப சாமி வீதி உலா

திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இன்று 5வது நாள் விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.

இன்றைய விழாவில்  மலையப்ப சுவாமி மோகினி அவதாரத்தில் பல்லக்கில்  வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். லட்சக்கணக்கான பக்தர்கள்  மோகினி அவதாரத்தில் சுவாமியை  தரிசித்து வருகின்றனர். இன்று இரவு  கருட வாகன வீதி உலா (கருட சேவை) நடைபெற உள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 13ம் தேதி முதல் விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும் இருந்து லட்சகணக்கான பக்தர்கள் திருமலையை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.

நேற்று 4வது நாளாக கற்பக விருட்சத்தில் சீதேவி பூதேவியுடன் மலையப்பசாமி தோன்றி நான்கு மாட வீதிகளில் உலா வந்து அருள் பாலித்தார். தொடர்ந்து  இரவு கருட வாகனத்தில் வீதி உலாக வந்தார்.

இன்று 5வது நாளாக பிரமோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சுவாமி திருவீதி உலாவின் போது,   ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடியும்,  பக்தர்கள் பஜனை பாடல்களை பாடியபடி, கோலாட்டம், பரத நாட்டியம் ஆடிக்கொண்டு மாட வீதிகளில் வலம் வந்தனர். மாட வீதிகளில் நடந்த பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கண்டு ரசித்தனர்.

மாட வீதியின் இரு புறத்திலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பி சுவாமியை தரிசனம் செய்தனர்.

நாளை,  18-ந்தேதி காலை அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 5 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு யானை வாகன வீதிஉலா நடைபெற உள்ளது.

19-ந்தேதி காலை சூரிய பிரபை வாகன வீதிஉலா, இரவு சந்திர பிரபை வாகன வீதிஉலா,

20-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 11 மணிவரை தேரோட்டம், இரவு குதிரை வாகன வீதிஉலா,

21-ந்தேதி காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை சக்கர ஸ்நானம் (சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி), இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை கொடியிறக்கத்தோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.